மேலும்

இன்று காலை கூடுகிறது சிறிலங்காவின் புதிய நாடாளுமன்றம்

parliamentசிறிலங்காவின் 8ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை ஆரம்பமாகவுள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு கூடும் புதிய நாடாளுமன்றத்தில், முதலில், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் தெரிவுகள் இடம்பெறும்.

இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும் முதல் நிகழ்வாக சபாநாயகர் தெரிவு இடம்பெறும். புதிய சபாநாயகராக கரு ஜயசூரியவின் பெயரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்மொழியவுள்ளார். இதையடுத்து, போட்டியின்றி, புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய தெரிவு செயய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சபாநாயகர், நாடாளுமன்ற செயலாளர் முன்னிலையில் பதவியேற்ற பின்னர் பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவுகள் இடம்பெறும்.

பிரதி சபாநாயகராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும், குழுக்களின் பிரதித் தலைவராக சிறுபான்மையினப் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்தும் இதன்போது அறிவிக்கப்படும்.

இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், சபாநாயகர் முன்னிலையில் கூட்டாக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர்.

காலை நேர அமர்வின்போது, தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பிரேரணையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் சமர்ப்பிக்க இருப்பதாகவும் தெரியவருகிறது.

இதன் பின்னர், நாடாளுமன்றம் பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்படும்.

நாடாளுமன்ற அமர்வை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் 2.20 மணியளவில் நாடாளுமன்றத்திற்கு வருவார்.

அவர் நாடாளுமன்றத்துக்கு வாகனப் பேரணியாக அழைத்து வரப்படும் போது, வீதியின் இருமருங்கிலும் படையினர் நின்று மரியாதை செலுத்துவர். அத்துடன் 21 பீரங்கிக் குண்டுகள் முழங்கி வரவேற்பு அளிக்கப்படும்.

இன்று காலை நடக்கும் அமர்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும், ஏற்கனவே பதவியேற்ற அமைச்சர்கள் மங்கள சமரவீர, டி.எம்.சுவாமிநாதன், விஜேதாச ராஜபக்ச ஆகியோருக்கு மட்டும் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும்.

ஏனைய உறுப்பினர்கள் விரும்பிய இடத்தில் அமர்ந்து கொள்ளலாம். பிற்பகல் அமர்வின் போது ஆசன வரிசையில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8ஆவது நாடாளுமன்றத்தின் அதிகாரபூர்வ அமர்வு பிற்பகல் 3.00 மணிக்கு புதிய சபாநாயகரின் தலைமையில் இடம்பெறும். இதில் சிறிலங்கா அதிபரின் கொள்கைப் பிரகடன உரை இடம்பெறும்.

அதன் பின்னர், நாடாளுமன்றம் நாளை மறுநாள் வரை ஒத்திவைக்கப்படும். இதனைத் தொடர்ந்து தேனீர் விருந்துபசாரம் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *