மேலும்

சிறிலங்காவின் வாக்குறுதிகளை வைத்து மட்டும் முடிவுகள் எடுக்கப்படாது – அமெரிக்க அதிகாரி

Tom-Malinowskiசிறிலங்காவின் வாக்குறுதிகளை மட்டும் வைத்து முடிவுகளை எடுக்கமாட்டோம், அதன் செயற்பாடுகள் மற்றும் அடைவுகளை வைத்தே அது தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமைகள், ஜனநாயகம், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி.

திருகோணமலைக்கு நேற்று பயணம் மேற்கொண்ட அவர், அங்கு செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிடுகையில்,

ஜனவரி 8 ஆம் நாள் நடந்த அரசியல் மாற்றத்தின் பின்னர் நல்லிணக்கம் மற்றும்  பொறுப்புக்கூறல் தொடர்பாக  ஐ.நா.வுடனும் அமெரிக்காவுடனும் இணைந்து செயற்பட சிறிலங்காவின் புதிய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம்  மேற்கொள்ள வேண்டிய உண்மையான செயற்பாடுகள் பற்றி அனைத்துலக சமூகம் மீளவும் வலியுறுத்தியுள்ளது.

இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது தொடர்பாக அனைத்துலக  சமூகம் தொடர்ச்சியாக கண்காணிக்கும்.

அனைத்துலக சமூத்துக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி தொடர்பான செயற்பாட்டையும் அதன் விளைவுகளையும் கூர்ந்து கவனிக்கும்.

இதில் சிறிலங்கா அரசாங்கம் சில பிரச்சினைகளை எதிர் கொள்ளலாம்.

முழுமையான நீதி கிடைப்பதற்கு சற்று காலம் எடுக்கலாம். சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்துக்கும், உள்ளூர்மட்டத்தில் அரசியல் ரீதியான, கலாசார மாற்றங்கள் ஏற்படவும் காலம் தேவைப்படும்.

ஆனாலும் சில விடயங்கள் துரிதப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக சிறிலங்கா இராணுவம் தன்வசம் வைத்துள்ள மக்களின் காணிகள் மிகவிரைவாக ஒப்படைக்கப்பட வேண்டியிருக்கும்.

இது சாதாரண மக்கள் மத்தியில் உண்மையான  நம்பிக்கையை கட்டி எழுப்ப உதவும்.

அதனை வழங்க சிறிலங்கா அரசாங்கம் இராணுவத்தை ஊக்கப்படுத்த வேண்டும். விரைவுபடுத்த வேண்டும்.

குற்றச்சாட்டுகள் தொடர்பான பொறுப்புக்கூறும் நடவடிக்கையில், முக்கியமான விடயம் சட்டரீதியான அணுகுமுறையாகும்.

சிறிலங்காவுக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் இதுமிகவும் கடினமான விடயமாக இருக்கும்.

ஆனால் முழுமையாக அது அனைத்துலக  விசாரணையாக அமையும் என நான் நினைக்கவில்லை.

அவ்வாறு அமையாவிட்டாலும் உள்ளூர் பொறிமுறை பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சமூகம் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் நம்பிக்கை கொள்ளும் ரீதியிலும் அமையலாம்.

அதைவிட அரசியல் தலைமைக்கு அப்பாற்பட்டதாக சுதந்திரமானதாக இருக்க வேண்டும். அது குறிப்பிட்டளவு அனைத்துலக பொறிமுறையுடன் சம்பந்தப்பட்டதாக  இருக்கலாம்.

ஆனால் அது சிறிலங்காவின் சட்டவரையறைக்குள் அமைந்ததாக அமையும் என நான் நம்புகின்றேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *