மேலும்

போர்க்குற்றச்சாட்டுகள் வலுப்பெறுகிறது – ஒப்புக்கொள்கிறார் சிறிலங்கா இராணுவத் தளபதி

Chrisanthe de Silvaசிறிலங்கா இராணுவத்தின் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் அனைத்துலக மட்டத்தில் வலுப்பெற்று வருவதாக ஒப்புக்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி, அந்தக் குற்றச்சாட்டுகளை வலுவிழக்கச் செய்வதற்கு சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தங்குகள் உதவியாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவம் அடுத்தமாதம் 1ஆம், 2ஆம் நாள்களில் நடத்தவுள்ள பாதுகாப்புக் கருத்தரங்கு தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் ஐந்தாவது ஆண்டாக சிறிலங்கா இராணுவம் இந்தப் பாதுகாப்புக் கருத்தரங்கை நடத்தவுள்ளது.

இதுதொடர்பான செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா இராணுவத் தளபதி,

”சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதை பல தடவைகள் வெளிப்படுத்தியுள்ளோம்.

ஒவ்வொரு ஆண்டும் சிறிலங்கா  இராணுவத்தினால் நடத்தப்படும் அனைத்துலக பாதுகாப்பு மாநாட்டின் போதும் இந்த விடயம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

போர்க்காலகட்டம் எவ்வாறு என்பதை விபரிக்க முடியாது. ஆனால் போர்முடிவடைந்ததில் இருந்து இன்று வரையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் செயற்பாடுகள் மிகவும் நேர்த்தியாகவும், மக்களை பாதுகாக்கும் வகையிலும் அவர்களுக்கு உதவும் வகையிலுமே அமையப் பெற்றுள்ளது.

எனினும் எம்மீதான போர்க்குற்றச்சாட்டுகள் அனைத்துலக மட்டத்தில் இன்னமும் வலுப்பெற்று வருவதை  நாம் நன்கு அறிவோம்.

இந்த கேள்விகளுக்கான பதிலை வடக்கு, கிழக்கு மக்களிடம் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். எமக்கு இருக்கும் நல்லதொரு சாட்சியாக வடக்கு, கிழக்கு மக்களே உள்ளனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரையில் வடக்கிலும் கிழக்கிலும் சிறிலங்கா இராணுவத்தினால் கையாளப்படும் செயற்பாடுகள் அப்பகுதி மக்களுக்கு மட்டுமே தெரியும். ஆகவே எமக்கு இருக்கும் நல்லதொரு சாட்சி அப்பகுதி மக்களேயாவர்.

அதுபோல, நாம் நடத்தும் அனைத்துலக பாதுகாப்பு மாநாட்டின் மூலம் எம்மீதான குற்றச்சாட்டுகளை நீக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக நம்புகின்றோம்.

கடந்த காலங்களை விடவும் இம்முறை எமது பாதுகாப்பு மாநாட்டில் பங்குபற்றும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அனைத்துலக  மட்டத்தில் எம்மீதான நம்பிக்கையும் அதிகரித்து வருகிறது.

அனைத்துலக மட்டத்தில் எழும் எம்மீதான குற்றச்சாட்டுகளை பொய் என நிரூபிக்க இந்த பாதுகாப்பு மாநாடு நல்லதொரு வாய்ப்பாக அமையும்.

அதேபோல் எம்மீது எழுப்பப்படும் பலவிதமான விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் இந்த மாநாட்டின் பின்னர் விடை கிடைக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *