மேலும்

ராஜபக்சவின் தோல்வி சீனாவுக்கு சிறந்த பாடம்- கேணல் ஹரிகரன்

mahinda-rajapaksaசீனர்கள் நிதியை விரும்புகிறார்கள். சீன அதிபர் பட்டுப்பாதைத் திட்டத்தை நிறைவேற்ற விரும்புகிறார். இவ்விரண்டையும் அடைவதற்கு சீனாவிற்கு சிறிலங்கா மிகவும் முக்கியமானதாகும்.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் வெளியாகியுள்ள கேணல் ஆர்.ஹரிகரன் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தோல்வியுற்றதுடன் சிறிலங்காவின் முன்னாள் அதிபரான மகிந்த ராஜபக்சவின் பிரதமராகும் கனவு சுக்குநூறாகியது.

ஆகஸ்ட் 17 அன்று இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.  சிறிலங்காவின் வரலாற்றில் மிகவும் அமைதியாக இடம்பெற்ற தேர்தலாக இத்தேர்தல் கணிக்கப்படுகிறது. இத்தேர்தலில் 70 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 22 தேர்தல் மாவட்டங்களில் எட்டு மாவட்டங்களில்  மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 11 தேர்தல் மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

ஏனைய மூன்று மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாணம், வன்னி மற்றும் மட்டக்களப்பு தெற்குத் தேர்தல் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

சிறிலங்காவின் தேர்தல் முறைமையின் பிரகாரம், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 196 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையின் கீழ் 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்படுகின்றனர்.

இத்தேர்தல் மாவட்டங்களில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் விகிதாசார முறையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் ஆசனங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதி 29 ஆசனங்களும் தேசியப் பட்டியல் மூலம் நிரப்பப்படுகின்றன.

ஆகஸ்ட் 18 காலையில் தேர்தல் பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னரேயே தான் தேர்தலில் தோல்வியுற்றுவிட்டேன் என ராஜபக்ச அறிவித்திருந்தார்.

‘பிரதமராக வருவதற்கான எனது கனவு நனவாகாது. நான் இத்தேர்தலில் தோல்வியுற்று விட்டேன். நாங்கள் சிறந்ததொரு போட்டியில் தோற்றுவிட்டோம்’ என மகிந்த ராஜபக்ச அறிவித்தார்.

கடந்த ஜனவரியில் இடம்பெற்ற அதிபர் தேர்தலைக் கருத்து வாக்கெடுப்பாக நோக்க முடியும் என விக்கிரமசிங்க விபரித்திருந்தார். பத்தாண்டாக நாட்டை ஆட்சி செய்த மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறவேண்டுமா என்பதை சிறிலங்காவின் 15 மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்காளர்களே தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் ரணில் தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்திருந்தார்.

சிறிலங்காவின் ஆட்சி வரலாற்றில் மிகவும் அதிகாரம் மிக்க ஒருவராக விளங்கிய மகிந்த ராஜபக்ச மீண்டும் ஒரு தடவை தற்போது தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். இது இவர் சந்தித்த இரண்டாவது தோல்வியாகும். மக்கள் ராஜபக்சவைத் தமது தேசியத் தலைமையாக ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை என்பதையே இத்தேர்தல் பெறுபேறு காண்பிக்கிறது.

சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேனவால் நிறைவேற்று அதிபருக்கான அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டு பிரதமருக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்ட பின்னர், சிறிலங்காவின் பிரதமராக வரவேண்டும் என மகிந்த ராஜபக்ச அதீத நம்பிக்கை கொண்டிருந்தார்.

அத்துடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் ராஜபக்ச முயற்சித்தார்.  ஆனால் இவ்விரு முயற்சிகளும் வெற்றியடையவில்லை.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அல்லது ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி தேர்தலில் பெரும்பான்மை வெற்றியைப் பெற்றிருக்காவிட்டாலும் கூட, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளது. இதனால் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.

சிறிலங்காவின் அதிபர் சிறிசேன மற்றும் பிரதமர் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் இணைந்து தமது நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்த முடியும். இதன்மூலம் அரசியல் யாப்பில் மேலும் சீர்திருத்தங்களை மேற்கொள்வதுடன், பொருளாதார நடவடிக்கைகளிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.

ராஜபக்சவின் தேர்தல் தோல்வியானது சிறிசேனவுக்குக் கிடைத்துள்ள பாரிய அரசியல் வெற்றியாகும். ஏனெனில் குறிப்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் சிறிசேனவின் தலைமைத்துவத்திற்கு சவால் விட்டதுடன் மீண்டும் ராஜபக்சவை தலைவராக்க முயற்சித்தனர்.

சிறிசேன தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவைச் சேர்ந்த 13 உறுப்பினர்களைப் பதவி நீக்கம் செய்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் முக்கிய செயலர்களை சிறிசேன புதிதாக நியமனம் செய்தார். ஆகஸ்ட் 17 அன்று தேர்தல் முடிவடைந்த கையோடு சிறிசேன இந்த மாற்றம் தொடர்பாக அறிவித்தார்.

கொழும்பு உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 31ல் மீண்டும் திறக்கப்படும் போது சிறிசேனவின் இந்த தீர்மானம் சவால்களுக்கு உட்படலாம். சிறிலங்காவில் செயற்படும் அரசியற் கட்சிகளின் செயலாளர்களே தமது தேசியப் பட்டியல் உறுப்பினர்களை நியமிக்க முடியும் என முன்னாள் பிரதம நீதியரசர் தெரிவித்தார்.  இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் முறையீடு செய்யும்போது அது தொடர்பாக நீதிமன்றம் விசாரணை  செய்ய முடியும்.

தான் அதிபராகக் கடமையாற்றிய அதே நாடாளுமன்றில் ராஜபக்ச இனிவரும் நாட்களில் எதிர்க்கட்சி வரிசையில் அமரவேண்டும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டால் இவர் தனது விசுவாசிகளுடன் இணைந்து நாடாளுமன்றைக் குழப்பும் நடவடிக்கையில் ஈடுபடலாம். இவர் இதனைச் செய்வாரா?

ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்ட பின்னர் இதுவரை இரண்டு தேர்தல்களில் தோல்வியுற்ற மகிந்த ராஜபக்சவின் அரசியற் செல்வாக்கு குறைவடைந்துள்ளது. ஆனால் தென் இலங்கையைச் சேர்ந்த பௌத்த தேசியவாத சிங்களவர்கள் மத்தியில் ராஜபக்சவிற்கு ஆதரவு தொடர்ந்தும் காணப்படுகிறது. ஆகவே ராஜபக்ச மீண்டும் அரசியலில் நீடிப்பாரா?

ராஜபக்சவிற்கு அப்பால், சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் இந்த வினாவை ஆராய்வார்கள். முன்னாள் அதிபர் ராஜபக்சவுடன், அவரது சகோதரரான சமல் ராஜபக்ச மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ச ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இது இந்த மூன்று ராஜபக்சக்களுக்கும் பாதுகாப்பை அளிக்கிறது.

நாடாளுமன்றம் கூடியிருக்கும் வேளையில் இந்த மூன்று பேரும் கைதுசெய்யப்பட முடியாது. ஊழல் மோசடி மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில் இந்த விடயம் முக்கியத்தும் பெறுகிறது.

ஆனால் இந்த விசாரணை என்பது ராஜபக்சக்களுக்கு பெரும் தலைவலியாக அமையும். மக்கள் நிதியை மோசடி செய்தமை தொடர்பில் மகிந்தவுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இவரது சகோதரரான முன்னாள் அமைச்சர் பசிலுக்கு எதிராக ஊழல் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் மிக வேகமாக விசாரணை செய்யப்படுகிறது.

ஆனால் சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் ராஜபக்சக்களுக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்வதில் இவர்களுக்கு ஆதரவான சிங்கள ஆதரவாளர்களைக் கருத்திற் கொண்டு மிகக் கவனமாகச் செயற்பட வேண்டும்.

விக்கிரமசிங்கவின் தேர்தல் வெற்றியை இந்தியா வரவேற்றுள்ளது. அத்துடன் ராஜபக்ச தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளமை தொடர்பிலும் இந்தியா விழிப்புணர்வுடன் உள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் ராஜபக்ச தோல்வியுற்றதானது சீனாவுக்கான சிறந்ததொரு பாடமாக உள்ளது.அத்துடன் சிறிலங்காவில் தடைப்பட்டுள்ள தனது திட்டங்களை சிறிலங்காவின் புதிய தலைமையுடன் இணைந்து மேற்கொள்வதற்கான முயற்சிகளைக் கைக்கொள்ளும்.

சீன அதிபரின் 21வது நூற்றாண்டிற்கான கடல்சார் பட்டுப் பாதைத் திட்டமானது வெற்றிகரமாகச் செயற்படுத்தப்படுவதற்கு சிறிலங்காவுடனான உறவு மிகவும் முக்கியமானதாகும்.

சீனர்கள் நிதியை விரும்புகிறார்கள். சீன அதிபர் பட்டுப்பாதைத் திட்டத்தை நிறைவேற்ற விரும்புகிறார். இவ்விரண்டையும் அடைவதற்கு சீனாவிற்கு சிறிலங்கா மிகவும் முக்கியமானதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *