மேலும்

சிறிலங்கா: கடல்சார் ஆதிக்கப் போட்டியில் ஊசலாடும் அரசு

Srilanka-chinaஇந்திய மாக்கடலில் தனது செல்வாக்கைச் செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதா அல்லது சுயாதீன வெளியுறவுக் கோட்பாடு மற்றும் திறந்த பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் சிறிலங்கா தனது தலைவிதியைத் தானே தீர்மானிப்பதா என்ற இரு வேறு தெரிவுகளை சிறிலங்காவின் வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டிய நிலையிலுள்ளனர்.

இவ்வாறு project-syndicate ஊடகத்தில், இந்தியாவின் மூலோபாயக் கற்கைகள் பேராசிரியரான BRAHMA CHELLANEY எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இது நாட்டின் அரசியல் எதிர்காலத்தை மட்டுமல்ல இந்திய மாக்கடலில் சிறிலங்காவின் பூகோள அரசியல் எதிர்காலத்தையும் வடிவமைப்பதற்கான வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவிற்கு கேந்திர முக்கியத்துவத்தை வழங்குகின்ற இந்திய மாக்கடலின் ஊடாக உலகின் பெரும்பாலான கப்பல் போக்குவரத்துக்கள் இடம்பெறுகின்றன. அத்துடன் 70 சதவீத பெற்றோலிய வளங்கள் கொண்டு செல்லப்படுகின்ற ஒரு பூகோள மையமாகவும் இந்திய மாக்கடல் விளங்குகிறது.

இந்த நாட்டின் மூலோபாய முக்கியத்துவமானது சீனாவிடம் மட்டும் இழக்கப்படவில்லை. இலங்கைத் தீவில் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்றனவும் செல்வாக்குச் செலுத்த வேண்டும் எனப் போட்டியிடுகின்றன. இந்நிலையில் சீனா இவற்றை முறியடித்து இதன் இருப்பை இந்திய மாக்கடலில் பலப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

நடைபெறவுள்ள சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில், கடந்த ஒன்பது ஆண்டுகளாக சிறிலங்காவை ஆட்சி செய்து கடந்த ஜனவரியில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்த மகிந்த ராஜபக்சவும் போட்டியிடுகிறார். இவர் தனது ஆட்சிக்காலத்தின் போது அதிகாரத்துவ ஆட்சியை நிலைநாட்டியிருந்தார்.

அத்துடன் மகிந்த ராஜபக்ச தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் சலுகைகளை வழங்கியிருந்தார். இவரது காலத்தில் ஊழல் மோசடி நிறைந்திருந்தது. 26 ஆண்டுகளாக சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தமானது 2009ல் ராஜபக்சவால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் நாட்டில் வாழும் சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் ராஜபக்ச ஒரு போர்க் கதாநாயகனாக விளங்குகிறார்.

ஆனாலும் யுத்தத்தின் இறுதியில் பல்வேறு யுத்த மீறல்கள் இடம்பெற்றதாக ராஜபக்ச மீது குற்றம்சுமத்தப்படுகிறது. குறிப்பாக இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 40,000 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் அதிபராக இருந்த வேளையில், இந்தியாவுடனான உறவு முறிவடைந்திருந்தது. ஏனெனில் சிறுபான்மைத் தமிழ் மக்களுடன் ராஜபக்சவின் அரசாங்கம் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்தத் தவறியமையே இந்த முறிவுக்குக் காரணமாகும்.

ஆனால் ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சீனாவுடனான உறவு கணிசமானளவு நெருக்கமடைந்திருந்தது. சிறிலங்காவில் சீன நிறுவனங்கள் பல்வேறு கட்டுமான ஒப்பந்தங்களை மேற்கொண்டு அவற்றை அமுல்படுத்தின.

இதன்மூலம் சிறிலங்காவானது ஆசியா தொடக்கம் ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு வரை இணைப்பை ஏற்படுத்துவதற்கான சீனாவின் ‘பட்டுப்பாதைத் திட்டத்தை’ அமுல்படுத்துவதற்கான மிக முக்கிய மையமாக சிறிலங்காவைப் பயன்படுத்துவதில் சீனா வெற்றி கண்டது.

சீனாவின் பட்டுப்பாதைத் திட்டம் என்பது வெறும் வர்த்தக முயற்சியல்ல. இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீனாவின் கடற்படையினர் எரிபொருட்களை நிரப்புவதற்கும், பதிலீடுகள் செய்வதற்கும், மாலுமிகள் ஓய்வெடுப்பதற்கும் பராமரிப்பை மேற்கொள்வதற்குமான ஒரு தளத்தை சீனாவின் பட்டுப் பாதைத் திட்டம் வழங்குகிறது.

சீனாவானது பொருளாதார மற்றும் வர்த்தக சார் நலனை மட்டும் அடிப்படையாகக் கொண்டல்லாது இராணுவ நலன்களை அடைந்து கொள்வதற்காகவே இந்திய மாக்கடலைப் பயன்படுத்துகிறது என்பது கடந்த ஆண்டின் இறுதியில் சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தில் சீனக் கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கிக்கப்பல்கள் தரித்து நின்றதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.

இவ்வாறான செயற்பாடுகள் சிறிலங்காவானது இந்தியாவின் கியூபா என்கின்ற நிலைக்கு மாற வழிவகுத்தது.

சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் சீனாவுடன் சிறிலங்கா கொண்டுள்ள நெருக்கமான உறவால் இந்தியாவுடனான உறவு விரிசலடைந்துள்ளது என்கின்ற உண்மையை அடையாளங் கண்டுகொண்டனர்.

ராஜபக்சவால் சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் சிறிலங்கா கடன்படு நிலைக்குச் செல்வதற்கு மிகமுக்கிய காரணமாக உள்ளதாக, ராஜபக்சவின் சட்டசபையில் சுகாதார அமைச்சராகச் செயற்பட்டுப் பின்னர் ராஜபக்சவுக்கு எதிராக அதிபர் வேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா அதிபர் தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்திருந்தார்.

இதேபோன்று, ‘வெள்ளைக்காரரால் இராணுவத்தைப் பலப்படுத்துவதற்காக கையகப்படுத்தப்பட்ட சிறிலங்காவுக்குச் சொந்தமான நிலங்கள் தற்போது வெளிநாட்டுக்காரர்களால் ஒரு சில சிறிலங்கர்களுக்கு கப்பம் செலுத்தி உடமையாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையானது மேலும் ஆறு ஆண்டுகள் தொடர்ந்தால் எமது நாடு கொலனித்துவ நாடாக மாறும் அபாயம் உள்ளது. அவ்வாறு மாறினால் நாங்கள் அடிமைகளாகி விடுவோம்’ என சிறிசேன தனது தேர்தல் பரப்புரையின் போது எச்சரிக்கை விடுத்திருந்தார்.

சிறிசேனவின் தேர்தல் அறிக்கையில் சீனா எனச் சுட்டிக்காட்டப்படாவிட்டாலும் கூட, இது சீனாவைக் குறிக்கின்றது என்பது தெளிவாகும்.

சிறிசேன ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 1.4 பில்லியன் டொலர் பெறுமதியான சீனத் திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தது. இத்திட்டமானது சூழல் சட்டத்தை மீறுவதாகவும் இதில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கட்டளையிடப்பட்டது.

இதற்கும் மேலாக, சட்டத் திருத்தம் ஒன்றை முன்வைத்ததன் மூலம் இரண்டு தடவைகள் மட்டுமே அதிபராக பதவியேற்க முடியும் என்கின்ற சட்டம் நிறுவப்பட்டது. இதனால் ராஜபக்ச தற்போது போட்டியிட விரும்பும் பிரதமர் பதவிக்கான அதிகாரங்கள் பலமுற்றுள்ளன.

எனினும், மகிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதற்கான அனுமதியை சிறிசேன கடந்த மாதம் வழங்கியிருந்தார். சிறிசேனவால் தலைமை தாங்கப்படும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கீழேயே மகிந்த ராஜபக்ச தற்போது போட்டியிடுகிறார்.

இதனால் ரணில் விக்கிரமசிங்கவுடனான சிறிசேனவின் உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது போல் தெரிகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை பிரதமர் வேட்பாளராக ரணில் போட்டியிடுகிறார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி மத்தியில் தற்போது ஏற்பட்ட விரிசல் நிலையே ராஜபச்விற்குத் தேர்தல் நியமனம் வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டது.

நாடாளுமன்றில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது பெரும்பான்மையை வென்றால், ராஜபக்ச சிறிலங்காவின் புதிய அரசாங்கத்திற்குத் தலைமை தாங்குவார் என எதிர்வுகூற முடியாது. இது தொடர்பில் சிறிசேனவே தீர்மானம் இயற்ற வேண்டும்.

இந்நிலையில் சிறிசேன, மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் பதவியை வழங்குவாரா என்பது கேள்விக்குறியாகும். அத்துடன் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுக்கொள்வாரா என்கின்ற கேள்வியும் எழுகிறது.

ராஜபக்ச, பிரதமராக நியமிக்கப்படாவிட்டாலும் கூட, இவர் நாடாளுமன்ற ஆசனத்தைப் பெற்றுக் கொள்வாரானால், இவர் தனக்குச் சார்பான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மத்தியிலுள்ள செல்வாக்கு மற்றும் அரசியல் பலத்தின் மூலம் இவர்களை வழிநடாத்திச் செல்வார் என்பது வெளிப்படையானதே.

ஆனால் ராஜபக்ச பிரதமரானால் சிறிலங்காவின் தேசியக் கோட்பாடு மீது இவர் மிகவும் ஆதிக்கம் செலுத்துவார் என்பது நிச்சயமாகும்.

இதனாலேயே ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தாராளவாதிகளும் சிறுபான்மை மதத்தவர்களும் அச்சங்கொள்கின்றனர். ராஜபக்சவின் அதிகாரத்துவ ஆட்சியானது துருக்கியின் ரஜிப் எர்டோகனுடன் ஒப்பீடு செய்யப்பட முடியும்.

எர்டோகன், துருக்கியின் பிரதமராக பத்தாண்டுக்கும் மேலாக ஆட்சி செய்த பின்னர் கடந்த ஆண்டு நாட்டின் அதிபராக நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே இவ்வாறு நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது துருக்கியின் அதிபராவார். எர்டோகனுக்கு துருக்கியில் இஸ்லாமியர்கள் ஆதரவளிக்கின்றனர்.

இதேபோன்று சிறிலங்காவில் சிங்களப் பெரும்பான்மை சமூகத்தவர் மகிந்த ராஜபக்சவிற்குத் தமது ஆதரவை வழங்குகின்றனர்.

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் ‘சீனாவை குற்றவாளி போன்று செயற்படுத்துகிறார்’ என மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ள நிலையில், இவர் மீண்டும் சிறிலங்காவின் ஆட்சியைக் கைப்பற்றுவாரானால் இதனை சீனா மகிழ்வுடன் கொண்டாடும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

இதன் விளைவுகள் சீனாவின் இந்திய மாக்கடல் மூலோபாயத்தில் சிறிலங்கா மிக முக்கிய சக்தியாகப் பயன்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்த உதவும்.

சிறிலங்காவில் நடைபெறவுள்ள தேர்தல் மூலம் சிறிலங்காவின் வாக்காளர்கள் இருவேறு வித தெரிவுகளில் எதனைத் தெரிவு செய்வார்கள் என்பதை நோக்க வேண்டும்.

அதாவது இந்திய மாக்கடலில் தனது செல்வாக்கைச் செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதா அல்லது சுயாதீன வெளியுறவுக் கோட்பாடு மற்றும் திறந்த பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் சிறிலங்கா தனது சொந்த தலைவிதியைத் தானே தீர்மானிப்பதா என்கின்ற இரு வேறு தெரிவுகளை சிறிலங்காவின் வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டிய நிலையிலுள்ளனர்.

இதில் இறுதியான தெரிவையே மக்கள் தெரிவு செய்வார்கள் என ஒருசாரார் நம்புகின்றனர். சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று வெவ்வேறு சக்தி மிக்க நாடுகளின் மத்தியில் தமது கடல் சார் செல்வாக்கை நிலைப்படுத்துவதற்கான இவர்களது போட்டியில் சிறிலங்கா ஒரு ‘ஊசலாடும் அரசாக’ உள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *