மேலும்

இனப்பிரச்சினைத் தீர்வு தேர்தல் முடிவுகளிலேயே தங்கியுள்ளது – நெருக்கடிக்கான அனைத்துலக குழு

ICGசிறிலங்காவில் எதிர்வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தே, இனப்பிரச்சினைக்கான நிலையான தீர்வு குறித்த தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று நெருக்கடிக்கான அனைத்துலக குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

”சிறிலங்காவில் மைத்திரிபால சிறிசேன அதிபராகப் பதவியேற்று ஆறு மாதங்கள் கழிந்திருக்கும் நிலையில், பிரிவினைவாத அரசியலின் சிக்கல்கள் மீண்டும் உருவெடுத்துள்ளன.

அரச நிர்வாகத்தில் செய்யப்பட வேண்டிய முக்கியமான சீர்திருத்தங்கள் சிறிசேன அரசின் முதல் ஆறு மாதங்களில் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், அரசுக்குள் இருந்த பிளவுகளின் காரணமாகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் சிறிசேனவுக்கு ஏற்பட்ட தோல்வியின் காரணமாகவும் ஆழமான சீர்திருத்தங்களைச் செய்ய முடியவில்லை.

இதன் காரணமாகவே ராஜபக்சவும் அவரது ஆதரவாளர்களும் அரசியல் களத்திற்குத் திரும்பி வர முடிந்தது.

தனது ஆட்சிக்காலத்தின் முதல் ஆறு மாதங்களில் சிறிசேன குறிப்பிடத்தக்க செயல்களைச் செய்துள்ளார். குறிப்பாக 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை குறிப்பிடலாம். இதன்மூலம் அதிபரின் அதிகாரங்கள் குறிப்பிடத்தக்களவுக்குக் குறைக்கப்பட்டு சுதந்திரமான கண்காணிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சிறிசேனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் கூறியதைப் போல முந்தைய அரசு செய்த மோசடி, அதிகார துஸ்பிரயோகம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஊழலுக்கு எதிராக இந்த அரசு மேற்கொண்ட நடவடிக்கை பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனால், இதுவரை யாரும் தண்டிக்கப்படாதது வேறு சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு பல மாதங்களாக எதிர்ப்புத் தெரிவித்து வந்த சிறிசேன, தனக்குக் கட்சிக்குள் ஆதரவில்லாததன் காரணமாக, கடைசியில் அதற்கு இணங்க வேண்டியிருந்தது.

ராஜபக்சவால் பிரதமராக முடியாவிட்டால் கூட, அவர் தலைமையில் நாடாளுமன்றத்தில் செயற்படும் சிங்களத் தேசியவாதிகள், வரக்கூடிய ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொள்ளக் கூடிய இணக்கப்பாடு தொடர்பான நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட முடியும்.

சிறிசேனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து, இனப்பிரச்சினையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சில அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் சில விடுவிக்கப்பட்டுள்ளன. வடக்கு – கிழக்கை நிர்வகிப்பதில் இராணுவத்தின் பங்கு குறைந்திருக்கிறது.

போர் குறித்து நம்பகமான உள்நாட்டு விசாரணை நடத்துவோம் என அரசு வாக்குறுதியளித்தாலும் இதுதொடர்பாக யாரையும் தண்டிக்க வேண்டுமென்றால் சட்டரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் சில சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிறு பிரிவினர், வேறு சில சிறிய கட்சிகளை இணைத்து தேசிய அரசை அமைக்க சிறிசேன திட்டமிட்டிருந்தாலும், ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மிகத் தீவிரமாக களமிறங்கியிருப்பது அந்த முயற்சிகளுக்கு தடையாக அமையும்.

சிறிலங்காவின் இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வை உள்ளடக்கிய ஒரு நிலையான தீர்வு என்பது, இந்தத் தேர்தலில் முடிவுகளை வைத்தே அமையும்“ எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *