மேலும்

இந்தியாவின் செல்வாக்கிற்குள் இருப்பதே தமிழ் மக்களுக்கு நல்லது – யதீந்திரா

இலங்கைத்தீவு சீனாவின் ஆதிக்கத்திற்குள் வருவதை விட, இந்தியாவின் நிழலில் இருப்பதே தமிழ் மக்களுக்கு நல்லது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் யதீந்திரா தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளையை, அவரது அதிகாரபூர்வ வதிவிடத்தில் நேற்று நட்பு ரீதியாக சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

‘ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இந்திய – சிறிலங்கா உறவில் பதற்றமற்ற நிலை காணப்படுகிறது. மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இந்திய – சிறிலங்கா உறவு முற்றிலும் சீர்குலைந்திருந்தது.

மகிந்த ராஜபக்ச இந்தியா ஒரு உடனடி அயல்நாடென்பதை முற்றிலும் புறக்கணிக்கும் வகையிலேயே தன்னுடைய வெளிவிவகார கொள்கையை திட்டமிட்டிருந்தார். சிறிலங்கா கொஞ்சம் கொஞ்சமாக சீனாவின் ஆதிக்கத்திற்குள் வரும் வகையிலேயே அவருடைய செயற்பாடுகள் அமைந்திருந்தன.

இறுதியில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சீன நீர்மூழ்கிகள் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்பதற்கு அனுமதி வழங்கி புதுடில்லிக்கு அதிச்சியை ஏற்படுத்தினார்.

இவ்வாறானதொரு சூழலில் தான் ஒரு ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து மீண்டும் இந்திய – சிறிலங்கா உறவில் நெருக்கம் அதிகரித்திருக்கிறது.

இவ்வாறனதொரு சூழலில்தான் சிறிலங்கா – இந்திய கடல் எல்லையை இணைக்கும் வகையில் ஒரு நெடுஞ்சாலையை உருவாக்கும் முயற்சியில் இந்தியா ஆர்வம் காட்டி வருகினறது.

உண்மையில் இது சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தை முறியடிப்பதற்கான ஒரு திட்டமாகும். இந்தியாவின் இது போன்ற திட்டங்களை சிங்கள தேசியவாதிகள் அச்சத்துடன் பார்க்கின்ற சூழல்தான் தெற்கில் காணப்படுகிறது.

இப்படியான திட்டங்கள் மூலம் சிறிலங்கா எதிர்காலத்தில் இந்தியாவின் ஒரு மாநிலமாகி விடுமோ என்னும் அச்சம் அவர்கள் மத்தியில் காணப்படுகிறது.

இந்;தியா எங்களை கைவிட்டு விட்டது என்னும் குறைபாடு தமிழ்த் தேசியவாதிகள் மத்தியில் காணப்படுகிறது. ஆனால் சிங்கள தேசியவாதிகளோ இந்தியா தமிழர்களுக்கு தனிநாடு எடுத்து கொடுத்து விடும் என்பது போல அச்சப்படுகின்றனர்.

இதுதான் இந்திய – சிறிலங்கா உறவில் காணப்படும் முரண்பட்ட அரசியல்.

ஆனால் ஒரு உண்மையை தமிழ் மக்கள் மறந்துவிடக் கூடாது. நாங்கள் இந்தியாவுடன் எங்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் பேச முடியும். ஆனால் சீனாவுடன் அது கூட முடியாது.

அந்த வகையில் பார்த்தால் சிறிலங்கா, சீனாவின் ஆதிக்கத்திற்குள் வருவதை விடவும், இந்தியாவின் நிழலில் இருப்பது தமிழ் மக்களுக்கு நல்லதே” என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *