மேலும்

சிறிலங்கா இராணுவத்தினருக்கு வாய்ப்பூட்டு – கிரிசாந்த டி சில்வா கடும் உத்தரவு

Chrisanthe de Silvaவரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரைகளில் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபடுவதற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தடைவிதித்துள்ளார். இது தொடர்பாக அவர் படையினருக்கு நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

சில வேட்பாளர்களுக்கு ஆதரவாக இராணுவத்தினர் பரப்புரையில் ஈடுபட்டுள்ளதாகவும்,  சிலர் அரசியல் கட்சிகளின் பணியகங்களில் செயற்படுவதாகவும் பாதுகாப்பு அமைச்சுக் கு கிடைத்த தகவல்களை அடுத்தே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு வடிவிலான தேர்தல் பரப்புரைகளிலும், இராணுவத்தில் உள்ள எந்தவொரு நிலையில் உள்ள அதிகாரியோ, சிப்பாயோ ஈடுபடக் கூடாது என்றும் தொண்டர் படையில் உள்ளவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறுவோர் ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

இணையத்தளம் அல்லது சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, எந்தவொரு வேட்பாளருக்கு ஆதரவாக அல்லது எந்தவொரு கட்சிக்கு எதிராக பரப்புரை செய்வதற்கும் இந்த உத்தரவு மூலம் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எந்தவொரு அரசியல் கட்சியினது அல்லது அரசியல் நோக்கம் கொண்ட கூட்டங்கள், பேரணிகள், பரப்புரைகள் அல்லது கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்கும் இராணுவத்தினருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரசியல் செல்வாக்கு செலுத்தும் அல்லது பரப்புரை செய்யும் பிரசுரங்களை வெளியிடவோ விநியோகிக்கவோ கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எந்தவொரு அரசியல் சின்னங்களையோ பதாகைகளையோ, சுவரொட்டிகளையோ, வேறு ஏதேனும் பரப்புரை பொருட்களையோ,  தமது தனிப்பட்ட அல்லது அதிகாரபூர்வ வாகனங்களிலோ, வதிவிடங்களிலோ, தங்கு விடுதிகளிலோ காட்சிப்படுத்தக் கூடாது.

எந்தவொரு சூழ்நிலையிலும், இராணுவத்தினர் பொது இடங்களில் அரசியல் தொடர்பான கலந்துரையாடல்களிலே ஈடுபடவோ அல்லது அரசியல் தொடர்பாக கருத்து வெளியிடவோ கூடாது.

எந்தவொரு அரசியல் நிகழ்விலும், இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்கும் அதிகாரிகள் அதற்கு முன்கூட்டியே இராணுவத் தளபதியிடம் இருந்து அனுமதி பெறவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த வெள்ளிக்கிழமை கொண்டு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடந்த அமைச்சர் மகிந்த சமரசிங்கவின் நூல்கள் வெளியிடப்பட்ட நிகழ்வுக்கு முப்படைகளின் தளபதிகள் மற்றும் காவல்துறை மா அதிபர் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *