மேலும்

வடக்கு, கிழக்கு இல்லாத புதிய நாட்டை உருவாக்கப் போகிறார் ரணில் – மகிந்த ராஜபக்ச

mahinda-rajapaksheவடக்கு, கிழக்கு இல்லாத புதிய சிறிலங்காவை உருவாக்கவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முனைவதாக, குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

கொழும்பு விகாரமாதேவி உள்ளக அரங்கில், 61 சிங்கள, பௌத்த அமைப்புகளுடன், மகிந்த ராஜபக்ச நேற்று புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டார்.

அந்த நிகழ்வில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, “ நாட்டையும் மக்களையும் நேசிக்காத, டொலர்களுக்கு அடிமையானவர்கள் எம்மை தோல்வியடையச் செய்ய கங்கணம் கட்டி செயற்படுகின்றனர்.

நாடு என்னிடம் கையளிக்கப்பட்ட போது நாட்டின் மூன்றில் இரண்டு பகுதி எமது கட்டுபாட்டின் கீழ் இருக்கவில்லை. கடல் எல்லைகளும் எமக்கு சொந்தமாக இருக்கவில்லை.

அவ்வாறு இருந்த நாட்டை மீட்டெடுத்து சுதந்திரமான நாட்டை மக்களுக்கு கையளித்தேன்.

போரை முடித்து பயங்கரவாதத்தை முற்றாக அழித்தது மட்டுமின்றி நாட்டின் அபிவிருத்திகளை துரிதப்படுத்தினேன். பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தேன்.

ஆனால் நாடு இன்று பின்னோக்கி செல்கிறது. அபிவிருத்திகள் அனைத்தும் நின்று போயுள்ளன. நாடு தொடர்பாக பயங்கரமான அச்சநிலை தோன்றியுள்ளது.

எமது நாடு எமது கையை விட்டுப் போய்விடுமா என்ற பயம் குடிகொண்டுள்ளது. ரணிலின் புதிய நாட்டை கட்டியெழுப்பும் கொள்கையும் இதற்கு ஏற்றதாகவே அமைந்துள்ளது.

சிறிலங்காவின் வரைபடத்தில் வடக்கு,கிழக்கு இல்லாத புதிய நாட்டை உருவாக்குவதே ரணிலின் புதிய நாட்டை கட்டியெழுப்பும் கொள்கையாகும்.

வடக்கு, கிழக்கு பிரிந்த பின்னர் சிறிலங்காவின் புதிய வரைபடம் உருவாகும். இதற்கான உறுதி மொழியையே ரணில் புதிய நாடு கட்டியெழுப்பப்படும் என்பதன் ஊடாக வெளியிட்டுள்ளார்.

வடக்கு,கிழக்கு இணைக்கப்பட்ட சமஷ்டி முறைக்கு அப்பால் சென்று தனிநாட்டையே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கேட்கின்றனர். இதற்காக எந்தவிதமான உடன்பாடுகள் செய்து கொள்ளப்பட்டதோ தெரியாது.

அத்தோடு இந்தத் திட்டத்திற்கு ரணில் எவ்வாறு இணங்கினார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

நாடு பிரிந்தால் அதனை மீண்டும் இணைப்பது பாரிய நெருக்கடிகளை தோற்றுவிக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *