மேலும்

திருகோணமலையில் போட்டியிட புலிகளின் முன்னாள் முக்கிய பிரமுகர் விண்ணப்பம்

Rupan-Athmalingam Ravindraவரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு, விடுதலைப் புலிகளின் முன்னாள்  முக்கிய போராளியான ரூபன் இலங்கைத் தமிழரசுக் கட்சியிடம் விண்ணப்பித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராகவும், தலைமைச் செயலகப் பொறுப்பாளராகவும், பொருண்மிய மேம்பாட்டுக் கழகப் பொறுப்பாளராகவும், இருந்தவர் ரூபன் எனப்படும் ஆத்மலிங்கம் ரவீந்திரா.

1985ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு மே மாதம் வரை 24 ஆண்டுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாக இருந்தவர்.

2000ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 13 ஆயிரம் வாக்குகளை மட்டும் பெற்று பிரதிநிதித்துவத்தை இழந்த நிலையில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனினால், திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட, ரூபன் மேற்கொண்ட அரசியல் நகர்வுகளால், அடுத்த ஆண்டு- 2001இல் நடந்த தேர்தலில் 66,500 வாக்குகளைப் பெற்றதுடன், இரா. சம்பந்தனும் நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

1987ஆம் ஆண்டு இந்திய-சிறிலங்கா உடன்பாட்டுக்கு அமைய வட- கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்படவிருந்த இடைக்கால நிர்வாக சபையில் விடுதலைப் புலிகளின் சார்பில் ரூபன் பெயரிடப்பட்டிருந்தார்.

இவர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ் மக்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் சேவையாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தை இவர், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிடம் கையளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *