மேலும்

புலிகளின் முகாம்களுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியவருக்கே மரணதண்டனை

sunil-rathnayakeமிருசுவில் படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் படையணியைச் சேர்ந்த சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, மற்ற படையினர் பயந்து போயிருந்த போது தாம் விடுதலைப் புலிகளின் முகாம்களுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மிருசுவில் படுகொலைகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பை அறிவிக்க முன்னர், குற்றம் நிரூபிக்கப்பட்ட சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவிடம் ஏதேனும் கூற விரும்புகிறீரா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு, தான் மரணதண்டனை விதிக்கும் அளவுக்கு குற்றம் செய்யவில்லை என்று அவர் கூறினார்.

அத்துடன், தான் இராணுவத்தில் சேவையாற்றியதாகவும், மற்றப் படையினர் முன் செல்லப் பயந்திருந்த போது விடுதலைப் புலிகளின் முகாம்களுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும் குறிப்பிட்டார்.

தாம் சிறப்பாக போரிட்டவர் என்றும், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் நிராகரிப்பதாகவும், சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க தெரிவித்தார்.

sunil-rathnayake

இதையடுத்தே, நீதிபதிகள், சுனில் ரத்நாயக்கவுக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்ததுடன், 51ஆயிரம் ரூபா அபராதமும் விதித்தனர்.

இந்த அபராதத்தை செலுத்த தவறினார், 7 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தமது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

மிருசுவில் படுகொலைகளில் ஈடுபட்ட ஆழ ஊடுருவும் படையணியே,(Long Range Reconnaissance Patrol) விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊடுருவி ஏராளமான கிளைமோர் தாக்குதல்களை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *