மேலும்

சிறிலங்காவின் பாதுகாப்புக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தலாம் – எச்சரிக்கிறார் கோத்தா

gotabhaya-rajapakseசிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு இன்னமும் அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

விடுதலைப் புலிகளின் அனைத்துலக ஆதரவாளர்களும், அதன் வலையமைப்பும் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தீவிரவாத முறியடிப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையை ஆதாரம்காட்டி, அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், தாம் இதனைப் பல சந்தர்ப்பங்களில் எடுத்துக் கூறியிருந்ததாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘முன்னைய அரசாங்கத்தின் விழிப்பு நிலையால், விடுதலைப் புலிகள் தலையெடுக்கும் அச்சுறுத்தல் தடுக்கப்பட்டது.

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தாக்குதல் எதுவும் இடம்பெறவில்லை என்பதால், விடுதலைப் புலிகள் முற்றாக இல்லாமல் போய் விட்டனர் என்று அர்த்தமில்லை.

இன்னமும் சில விடுதலைப் புலிகள் தனிநாட்டை அமைப்பதற்கான போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் அர்ப்பணிப்புடன் உள்ளனர்.

கடந்த ஆண்டு இத்தகைய ஒரு முயற்சி முறியடிக்கப்பட்டு, மூன்று விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

முன்னர், மிக உயர்ந்த பாதுகாப்பு தரம் பேணப்பட்டது.  புலனாய்வு அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டிருந்தன.

ஆனால் இப்போது வடக்கு கிழக்கில் முக்கியமான இடங்களில் இராணுவம் நிலை நிறுத்தப்பட்டிருந்த பெருந்தொகை நிலங்கள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகள் மீண்டெழுவதை தடுக்க இந்த இராணுவ முகாம்கள் அவசியம்.

புதிய அரசாங்கம், வடக்கில் இராணுவ முகாம்களின் எண்ணிக்கையை குறைக்கத் தொடங்கியது வருத்தமளிக்கும் விடயம்.

சில சந்தர்ப்பங்களில், முக்கியமான இடங்களில் இருந்த இராணுவ முகாம்களும் அகற்றப்பட்டுள்ளன.

இது எதிர்காலத்தில்  விடுதலைப் புலிகளுக்கு மூலோபாய நலன்களைக் கொடுத்து குழப்பமான நிலைமைகளை ஏற்படுத்தக் கூடும்.” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அதேவேளை, சில நாட்களுக்கு முன்னர், கோத்தாபய ராஜபக்சவிடம் நாட்டின் பாதுகாப்பு நிலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்த போது, தனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது என்றும், தமக்கு புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து அறிக்கைக்கள் கிடைப்பதில்லை என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *