மேலும்

மைத்திரி அரசிடம் வடக்கு மக்கள் எழுப்பும் கேள்வி

thellipalai-damage-houseகஸ்தூரி உதயகுமாரியின் குடும்பத்தினர் 1990ல் தெல்லிப்பளையிலிருந்து இடம்பெயர்ந்திருந்தனர். யாழ்ப்பாண நகரிலிருந்து 30 கிலோமீற்றர் தொலைவிலுள்ள தெல்லிப்பளை 1990ல் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது. இராணுவ ஆக்கிரமிப்பின் முன்னர் அந்தக் கிராமம் மிகவும் அமைதி நிறைந்ததாகக் காணப்பட்டது.

பல பத்தாண்டு கால யுத்தம் முடிவுற்று சில ஆண்டுகள் ஆகியுள்ளன. அத்துடன் சிறிலங்காவில் புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது.

18 வயதான கஸ்தூரியும் அவரது குடும்பத்தினரும் கடந்த சில மாதங்களாக தெல்லிப்பளையிலுள்ள அவர்களது வீட்டைச் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

‘நாங்கள் எமது நிலத்தைத் துப்பரவு செய்வதற்காக ஒவ்வொரு வாரஇறுதியிலும் இங்கு வருகின்றோம். நாங்கள் எமது காணியை அடையாளங் கண்டுள்ளோம். ஆனால் எமது வீடு முற்றிலும் அழிந்துவிட்டது’ என கஸ்தூரி தெரிவித்தார்.

இவர்களது வீடு கூரையிழந்து காணப்படுகிறது. 1990-2009 காலப்பகுதியில் சிறிலங்காவின் வடமுனையில் 11,629 ஏக்கர் நிலத்தை இராணுவத்தினர் கைப்பற்றியிருந்தனர். இந்த நிலப்பரப்பில் சிறிலங்கா இராணுவத்தினர் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தை அமைத்திருந்தனர். இதனால் தெல்லிப்பளை மற்றும் அதனை அண்டிய பிரதேச மக்கள் தமது நிலங்களைச் சென்று பார்வையிட முடியவில்லை.

பல்வேறு போராட்டங்களின் இறுதியில் தெல்லிப்பளை வாழ் மக்கள் தமது நிலங்களைப் பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. மைத்திரிபால சிறிசேன அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தற்போது இந்த நிலங்கள் உரிமையாளர்களிடம் மீளவும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நிலங்களை மீளக் கையளிப்பதன் மூலம் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களுடன் மீளிணக்கப்பாட்டை மேற்கொள்ள முடியும் என மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் நம்புகிறது. முன்னைய அரசாங்கம் பல்வேறு மோசமான சூழலை உருவாக்கிய நிலையில், கடந்த ஜனவரியில் சிறிசேன அதிபர் பதவியை ஏற்றிருந்தார்.

நிலச் சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டமானது முன்னைய அரசாங்கத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் புதிய அரசாங்கமானது இந்த நிகழ்ச்சித் திட்டத்தை விரைவுபடுத்தியுள்ளதாக சிறிசேனவின் பொதுச் செயலாளரான கபீர் ஹசீம் தெரிவித்தார்.

ஒக்ரோபர் 2010 தொடக்கம் 2014 இறுதிவரையான காலப்பகுதியில் ராஜபக்ச அரசாங்கம் 5255 ஏக்கர் நிலங்களை மட்டுமே அவற்றின் உரிமையாளர்களிடம் மீளக்கையளித்திருந்தது. ஆனால் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் இதுவரையில் 1000 ஏக்கர் நிலங்களை மீளக்கையளித்துள்ளதாக ஹசீம் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

‘மக்களின் மனங்களை வெற்றி கொள்வதென்பது மிகவும் கடுமையான பணியாகும். இதற்கு சில ஆண்டுகள் செல்லும்’ என அரசாங்கப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மீளக்கையளிக்கப்பட்ட இடங்களில் இராணுவத்தினர் தற்போதும் பிரசன்னமாகியுள்ளமையால் மக்கள் முற்றுமுழுதாகக் குடியேற முடியாத நிலை காணப்படுகிறது. இவ்வாறான ஆபத்து உள்ளபோதிலும் ஜம்புலிங்கம் சுதாகரனும் அவனது குடும்பத்தவரும் தமது வீட்டிற்குச் செல்வதெனத் தீர்மானித்தனர். இவர்கள் மட்டுமே தெல்லிப்பளையிலுள்ள தமது வீட்டிற்குத் துணிச்சலுடன் திரும்பிச் சென்றுள்ளனர்.

ஏனையவர்கள் தமது காணிகளுக்குச் செல்வதும் அவற்றைத் துப்பரவு செய்வதும் பின்னர் தாம் தற்காலிகமாகத் தங்கியுள்ள இடங்களுக்குத் திரும்பிச் செல்வதுமாக உள்ளனர். சுதாகரனின் குடும்பத்தவர்கள் தெல்லிப்பளையிலுள்ள முன்னைய நூலகக் கட்டடம் ஒன்றில் தங்கியுள்ளனர்.

இதேவேளையில் இவர்கள் தமது காணியைத் துப்பரவு செய்து அதில் சிறியதொரு வீட்டைக் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது காணிக்கு அருகில் பெரியதொரு இராணுவ முகாம் காணப்படுகிறது. இங்கு நிலைமை மோசமாக உள்ளதாக சுதாகரன் குறிப்பிட்டார்.

சிறிலங்கா இராணுவத்தினர் தனியாருக்குச் சொந்தமான எத்தனை ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தி வைத்திருக்கின்றனர் என்கின்ற கேள்வி தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது. வடக்கிலுள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் 10,000 ஏக்கருக்கும் குறைவான நிலங்களே உள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

ஆனால் உண்மையில் இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகமாக இருக்கும் என கொழும்பிலுள்ள மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் ஆய்வாளர் மிராக் ரஹீம் குறிப்பிட்டுள்ளார்.

‘இது தொடர்பான சரியான புள்ளிவிபரங்களை கணக்கிட முடியவில்லை. தமிழ்ப் புலிகளால் முன்னர் பயன்படுத்தப்பட்ட நிலங்கள் தற்போது சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதுபோன்று தனியாருக்குச் சொந்தமான வேறு நிலங்களும் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ளது’ என ஆய்வாளர் மிராக் ரஹீம் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் நிலை நிறுத்தப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் அகற்றப்படாது, சிறிசேன அரசாங்கத்தால் வாக்குறுதி வழங்கப்பட்டதற்கு அமைவாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் எவ்வாறு அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என்பதையும் இது தொடர்பாக வரையப்பட்ட நிகழ்ச்சித் திட்டம் எவ்வாறு அதன் இலக்கை அடையும் எனவும் மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

ஆங்கில வழிமூலம் – IRIN
மொழியாக்கம்   – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *