மேலும்

பதுக்கப்பட்ட சொத்துக்களை மீட்க அமெரிக்கா ஏன் உதவுகிறது?

us-india-chinaசீன நிதியுதவியுடன் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை மீளத் தொடங்குவதற்கு இந்தியா மட்டுமல்ல அமெரிக்காவும் தனது எதிர்ப்பைக் காண்பித்துள்ளது. எனினும், சீனா தொடர்ந்தும் இத்திட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது.

இவ்வாறு சிலோன் ரூடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற பின்னர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காக தனது முதலாவது உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

அப்போது, ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகித்த சில முக்கிய அரசியல்வாதிகளால் களவாடப்பட்டு வேறு நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள  பணத்தை மீளவும் பெற்றுக் கொள்வதற்கு மோடி உதவ வேண்டும் என மைத்திரிபால சிறிசேன கோரியிருந்தார்.

அத்துடன் சிறிலங்காவில் நிதிப் புலனாய்வுப் பிரிவொன்றை ஆரம்பிப்பதற்கு மோடி உதவ வேண்டும் எனவும் மைத்திரி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அரசியல்வாதிகளால் களவாடப்பட்ட சிறிலங்கா அரசிற்குச் சொந்தமான நிதியானது சென்.மாட்டின் தீவு, ஹொங்கொங் மற்றும் செச்செல்ஸ் ஆகிய நாடுகளின் வங்கிகளில் இடப்பட்டுள்ளதாகவும் மோடியிடம் மைத்திரி தெரிவித்திருந்தார்.

இதேபோன்று சிறிலங்காவிலிருந்து ராஜபக்சவின் முக்கிய அரசியல்வாதிகளால் திருடப்பட்ட பணமானது டுபாய், உகண்டா, கென்யா போன்ற நாடுகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மைத்திரி குறிப்பிட்டிருந்தார்.

இதற்கப்பால் சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்காவுக்கான சுற்றுப்பயணத்தின் போதும் ராஜபக்சவின் அரசாங்கத்தில் அங்கம் வகித்த முக்கிய பிரமுகர்கள் பலர் சிறிலங்கா அரசிற்குச் சொந்தமான நிதியை வேறு நாடுகளில் பதுக்கி வைத்துள்ளதாகவும் இவற்றை மீட்டெடுப்பதற்கு அமெரிக்கா உதவ வேண்டும் எனவும் அமெரிக்காவிடம் கோரியிருந்தார்.

அண்மையில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் ஹெரி சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த போது, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நிதியைக் கண்டுபிடிப்பதற்கு சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினருக்கு பயிற்சி வழங்கப்படும் என உறுதியளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சில வாரங்களின் பின்னர் சில வல்லுனர்களைக் கொண்ட குழுவொன்று சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தது.

மகிந்த ராஜபக்சவுக்குச் சொந்தமான பல பில்லியன் ரூபாக்கள் வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மங்கள ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த அறிவித்தலை சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மறுத்திருந்ததுடன் மங்களவுக்கு எதிராக வழக்குத் தொடுக்கவுள்ளதாகவும் அச்சுறுத்தினார்.

கடந்த வாரம் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் சந்திப்பை மேற்கொண்டிருந்தார். இச்சந்திப்பின் போது சிறிலங்காவின் முன்னைய ராஜபக்ச அரசாங்கம் நுரைச்சோலை மின்னுற்பத்தி ஆலையை உருவாக்குவதற்காக சீன அரசாங்கத்திடமிருந்து 15 பில்லியன் ரூபாக்களை தரகுக் கூலியாகப் பெற்றுள்ளதாக சந்திரிகா முறையிட்டிருந்தார்.

இதேவேளையில், மைத்திரி அதிபராகப் பொறுப்பேற்றபோது சீன நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்தியிருந்தார். இத்திட்டத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் காரணம் காட்டியே இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டது.

சீனாவிடமிருந்து சிறிலங்காவின் முன்னைய அரசாங்கம் தரகுக் கூலியைப் பெற்றதற்காகவே சிறிலங்காவில் நிதிப் புலனாய்வுப் பிரிவொன்றை உருவாக்குவதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் தமது ஆதரவை வழங்க முன்வந்திருக்க முடியும்.

சீன நிதியுதவியுடன் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை மீளத் தொடங்குவதற்கு இந்தியா மட்டுமல்ல அமெரிக்காவும் தனது எதிர்ப்பைக் காண்பித்துள்ளது. எனினும், சீனா தொடர்ந்தும் இத்திட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது.

இவ்வாறான முயற்சிகள் சீனாவுக்கு இன்னமும் நலன் பயக்கவில்லை. இந்நிலையில் சீன அரசாங்கமானது இத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் அனைத்துலக நீதிமன்றத்தில் வழக்குப் பதியவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் ராஜபக்சவின் அரசியல்வாதிகளால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நிதியை மீட்டெடுப்பதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து பணியாற்றி வெற்றியீட்டினால் கொழும்பு நகரத் திட்டத்தை மீளவும் தொடர்வது தொடர்பில் அனைத்துலக நீதிமன்றில் முன்வைக்கப்படும் விசாரணைகள் சீனாவுக்கு வெற்றியைத் தராது.

சீனாவுக்குப் பாடம் புகட்டுவதற்காக முன்னாள் ஆட்சியாளர்களால் வெளிநாட்டு வங்கிகளில் முதலிடப்பட்ட நிதியைக் கண்டுபிடிப்பதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் உதவிசெய்ய முற்படும்.

அமெரிக்கா மற்றும் சீனா போன்றன ஆபிரிக்கா நாடுகளில் முதலிட்டிருந்தால் இந்த நாடுகளின் அரசியல்வாதிகளுக்கு இவர்கள் இலஞ்சம் வழங்கியிருப்பர்.

சீனா விரைவாக நமிபியாவிற்கு மிகப் பெரிய கடன்திட்டத்தை குறைந்த கடன் வட்டியில் வழங்கியது. சீனத் தயாரிப்பு சரக்குக்கப்பல்களைப் பயன்படுத்தி கடத்தல்காரர்களைக் கைது செய்வதற்காக 53.3 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.  இது மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நமிபியாவில் நல்லதொரு திட்டத்தை முன்னெடுத்த சீனாவால் எதனையும் நல்லதாகச் செய்ய முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் என சீன அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் சீனாவால் வருடிகளை (ஸ்கனர்) வழங்குவதற்காக தெரிவுசெய்யப்பட்ட அரசிற்குச் சொந்தமான நிறுவனமானது பல மில்லியன் டொலர்களை இலஞ்ச ஊழலுக்காகப் பயன்படுத்தியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது. இது தொடர்பில் சீனா தனது கட்டுப்பாட்டைத் தளர்த்தும் வரை ஆராய்வதற்கு நமிபிய புலனாய்வு விசாரணை அதிகாரிகள் உதவி கோரியிருந்தனர்.

பாகிஸ்தானிலிருந்து அங்கோலா, கிர்கிஸ்தான் வரையான நாடுகளில் சீனா தனது வெளிநாட்டு நிதி முதலீட்டை மேற்கொண்டு வருகிறது. இராஜதந்திரக் கூட்டாளிகளை உருவாக்குதல், இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படுதல் போன்ற பல்வேறு தேவைகளுக்காக சீனா தனது நிதியைப் பயன்படுத்தி வருகிறது.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் தலைவர்கள் சீனாவின் கடன் வழங்கல் தொடர்பில் ஆச்சரியமடைந்துள்ளனர். ஏனெனில் மேற்குலக நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார மாற்றம் தொடர்பில் மேற்குலகு போன்று கோரிக்கை முன்வைக்காது இலகு கடன்களை சீனா வழங்கி வருகிறது.

சீனாவின் நிதியானது புதிய வீதிகள் அமைத்தல், சக்தி ஆலைகள் உருவாக்கப்படல், தொலைத் தொடர்பாடல் வலைப்பின்னலை ஆபிரிக்கக் கண்டம் முழுதும் பரப்புவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. 2001லிருந்து 200 இற்கும் மேற்பட்ட திட்டங்கள் சீன அரசாங்கத்தின் எக்சிம் வங்கியால் வழங்கப்பட்ட முன்னுரிமைக் கடன்களை மையப்படுத்தியதாகும்.

சீனாவின் வெளிநாட்டு முதலீடானது மிகப் பெரியளவில் உள்ளதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்த முதலீடானது நிறுவனங்களிடமிருந்து பொருட்கள் அல்லது சேவைகள் வாங்குவதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். இவற்றில் பெரும்பாலானவை அரச கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவையாகும்.

நாடொன்றைப் பயன்படுத்தி போட்டி மிக்க பேரம்பேசல் மேற்கொள்ளப்படுவது ஆரோக்கியமானதல்ல. திட்டச் செலவீனங்கள், கடன்தவணைகள் மற்றும் மீள்செலுத்தல் நிபந்தனைகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக சீனா தனது கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது.

டொலர்கள் பெறுமதியான கடன்திட்டங்கள் அரச இரகசியமாகப் பேணப்படுகிறது. நிதிக் கையாடல்களில் இரகசியம் பேணுதலானது ஊழலிற்கு வழிகோலுவதாகவும் இவ்வாறான ஊழல்கள் வெளிநாட்டினர் மேலும் உதவிகளை வழங்கமுடியாததாகவும் உள்ளது.

‘அரசாங்கத்தின் விசுவாசத்தைப் பெற்றுக்கொள்வதற்கு சீனா தனது நிதியைப் பயன்படுத்துகிறது’ என பிலிப்பீன்ஸ் சட்டப் பேராசிரியர் ஹரி றோக் தெரிவித்தார்.

‘இது மென்மையான இராஜதந்திர நகர்விற்காகப் பயன்படுத்தப்படும் காத்திரமான கருவியாகும். ஆனால் இது கடனை மீளச் செலுத்துவோருக்கு தீமையைத் தருகிறது. இந்த அடிப்படையில் இவ்வாறான நிதி இரகசியமானது வெளிநாட்டு உதவிகளுக்கான அனைத்துலக சட்ட வரையறைக்கு எதிரானதாக உள்ளது.

இவ்வாறான நிதிக் கையாடல்கள் ஊழல் மற்றும் மோசமான ஆட்சிக்கு வழிவகுக்கிறது. சீனத் திட்டங்களால் யார் உண்மையில் நலன்களைப் பெற்றுளனர் எனக் கேள்வியெழுப்பியுள்ளனர். இந்த விடயமானது மக்களின் பார்வையிலிருந்து ஒளித்து வைக்கப்பட்டுள்ளது என அனைத்துலக அபிவிருத்தி வல்லுனர்கள் தெரிவித்தனர்.

கொழும்பு நிரந்தரமாக துறைமுக நகரத் திட்டத்தை இரத்துச் செய்யுமாயின் சீனா அனைத்துலக நீதிமன்றுக்குச் செல்லும்.

இதன் பின்னர் வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள நிதியைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக சிறிலங்காவானது இந்தியாவினதும் அமெரிக்காவினதும் உதவியை நாடுவதுடன், நிதிப் புலனாய்வுப்  பிரிவொன்றையும் ஆரம்பிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *