மேலும்

புலிகளின் தாக்குதலில் மயிரிழையில் தப்பியவரே சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதி

Air Marshal Gagan Bulathsinghalaசிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள, உலங்குவானூர்தி விமானியாக போர்க்களப் பகுதிகளில் பணியாற்றியவர் என்றும், விடுதலைப் புலிகளின் ஆர்.பி.ஜி தாக்குதலில் மயிரிழையில் உயிர்தப்பியவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதியாக நேற்று நியமிக்கப்பட்ட, எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள, 1980களில் இருந்தே, போர்க்களப் பகுதிகளில் உலங்குவானூர்தி விமானியாகப் பணியாற்றியிருந்தார்.

1986ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 18ம் நாள், பிளையிங் ஒவ்விசராக இருந்த போது, புலத்சிங்கள செலுத்திய பெல் 412 உலங்குவானூர்தி விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்கானது.

தள்ளாடியில் இருந்து வவுனியாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த உலங்குவானூர்தியில் இருந்த ககன் புலத்சிங்கள, பூவரசன்குளம் பகுதியில், விடுதலைப் புலிகளின் சிறிய குழுவொன்று வாகனத்தில் செல்வதை அவதானித்து, அதன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.

சிறிலங்கா விமானப்படை உலங்குவானூர்தியில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்ட போது, விடுதலைப் புலிகளும் பதிலுக்குத் தாக்குதல் நடத்தினர்.

கடுமையான சண்டை நடந்து கொண்டிருந்த போது, வாகனத்தில் இருந்த ஒருவர், ஆர்பிஜியினால், உலங்குவானூர்தி மீது தாக்குதல் நடத்தினார்.

Gagan Bulathsinghala- damaged- bell-412

புலிகளின் ஆர்.பி.ஜி தாக்குதலில் சேதமுற்ற பெல் உலங்குவானூர்த்தியுடன் ககன் புலத்சிங்கள

இதனால் உலங்குவானூர்தியின் ஒரு இயந்திரம் சேதமடைந்து செயலிழந்தது. உடனடியாக அந்த உலங்கு வானூர்தி வவுனியாவில் தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து நினைவுகூர்ந்த ககன் புலத்சிங்கள ” சண்டை நடந்து கொண்டிருந்த போது, உலங்குவானூர்தியில் இருந்தவர்கள் தாக்கப்பட்டு விட்டோம் என்று கூச்சல் எழுப்பினர்.

ஒரு இயந்திரம் செயலிழந்த போதிலும் வவுனியாவில் அதனை பாதுகாப்பாக தரையிறக்கினோம்.

உடனடியாக நடத்திய பரிசோதனையில் ஆர்பிஜி ஒன்று இரண்டாவது இலக்க இயந்திரத்தில் தாக்கி அதனைச் சேதப்படுத்தியிருந்ததை கண்டுபிடித்தோம்.

துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், சுடப்பட்ட கிரனேட்டின் மூடி அகற்றப்படாமல் இருந்ததால், அது வெடிக்கவில்லை.

அது வெடித்திருந்தால் உலங்குவானூர்தி வெடித்துச் சிதறியிருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *