மேலும்

வித்தியா படுகொலை சந்தேகநபர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

suspects-vithyaபுங்குடுதீவில் மாணவி வித்தியாவை வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஒன்பது பேரை, பயங்கரவாத தடுப்பு பிரிவில் ஒரு மாதம் தடுத்து வைத்து விசாரிக்க ஊர்காவற்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வித்தியா படுகொலை வழக்கு இன்று இரண்டாவது தடவையாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ஒன்பது சந்தேக நபர்களும் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அதேவேளை, கடந்த முதலாம் திகதி இந்த வழக்கின் முதலாவது தவணையில் கோரப்பட்டிருந்த அறிக்கைகள் பல சமர்ப்பிக்கப்பட்டன.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது. வித்தியாவின் தாய், சகோதரன் ஆகியோரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. சாட்சியமளித்த போது இருவரும் அழுது மயக்கமடைந்து நீதிமன்றில் வீழ்ந்தனர்.

முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் தொடர்ந்து அவர்களின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.

அத்துடன் ஊர்காவற்துறை காவல்துறைப் பொறுப்பதிகாரி மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரும் சாட்சியம் அளித்தனர்.

இன்று வழக்கு தொடர்பான தடயப் பொருட்களும் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டன. தடயப் பொருட்களை இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன், சந்தேகநபர்கள் ஒன்பது பேரையும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக் கடிதம் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, சந்தேக நபர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவில் ஒரு மாதம் தடுத்து வைத்து விசாரிக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இதையடுத்து, சந்தேக நபர்கள் சிறைச்சாலை அதிகாரிகளால், பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

அதேவேளை, சந்தேநக நபர்கள் இன்று நீதிமன்றுக்கு அழைத்து வரப்படும் வேளை நீதிமன்ற வளாகத்தை சூழவும் பெருமளவான கலகம் அடக்கும் காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

நீதிமன்றத்துக்குள் தேவையின்றி எவரும் நடமாட அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *