மேலும்

கோத்தாவின் தந்திரோபாய நகர்வு – இந்தியன் எக்ஸ்பிரஸ்

Mahinda-Gotaவரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது சகோதரரான மகிந்த ராஜபக்ச அதிகாரத்தைக் கைப்பற்றும் வரையில், தாம் தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தீர்மானித்திருப்பதாக, தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுக்கவில் உள்ள பௌத்த விகாரையில் கடந்த சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கோத்தாபய ராஜபக்ச, தாம் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று கூறியிருந்தார்.

ஆனால், அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள், இது அவரது ஒரு தந்திரோபாய நகர்வு என்று தெரிவித்த்தாக இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

“தனது சகோதரரான மகிந்த ராஜபக்சவை வெற்றி பெற வைக்கும் பெரியதொரு இலக்கை மனதில் கொண்டு அவர் ஒதுங்கியிருக்கத் தீர்மானித்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதன் மூலம், ராஜபக்ச குழுவுக்கு ஆதரவாக நாடு முழுவதிலும் சுதந்திரமாக பரப்புரை மேற்கொள்ளலாம்.

இவர் மிகப் பிரபலமான இரண்டாவது தலைவர் என்பதுடன் இவரது பரப்புரை எல்லா தொகுதிகளிலும் தேவைப்படுகிறது.

இரண்டாவதாக, தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதன் மூலம், ராஜபக்ச குழுவுக்குள் பிளவுகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

கொழும்பு மாவட்டத்தில் ராஜபக்ச அணியில் பல முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்.

இந்தநிலையில் கோத்தாபய ராஜபக்சவும் களமிறங்கினால், அவர்களுடன் விருப்பு வாக்குகளுக்காக மோத நேரிடும். அதுமோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே, கோத்தாபய ராஜபக்ச, தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குள் பிரவேசிக்க கோத்தாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். ராஜபக்ச ஆட்சியமைத்தால், அவர் அமைச்சராகவும் நியமிக்கப்படுவார்.” என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *