மேலும்

யாழ்ப்பாணத்தில் இன்னமும் 93 இராணுவ முகாம்கள் – உறுதிப்படுத்தினார் படைத்தளபதி

Maj. Gen. Nandana Uawatteவிடுதலைப் புலிகளுடனான ஆயுத மோதல் முடிவுக்கு வந்த பின்னரும், யாழ்ப்பாணத்தில் சிறிலங்காப் படையினரின் 93 படைமுகாம்கள் இன்னமும் இயங்கி வருவதை யாழ்.படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

கொழும்பு ஊடகவியலாளர்கள் குழுவொன்றை பலாலிப் படைத் தலைமையகத்தில்  நேற்று சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“2009ஆம் ஆண்டு  ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், யாழ். குடாநாட்டில் எந்தவொரு தீவிரவாதச் சம்பவமும் இடம்பெறவில்லை.

ஜனவரி 8ஆம் நாள்  நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின்னர் யாழ்.குடாநாட்டில் எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை. சிறிலங்கா இராணுவம் சிறந்த முறையிலான கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.

புங்குடுதீவில் மாணவி படுகொலையை அடுத்து நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து,  படையினர் குவிக்கப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் தவறானவை.

Maj. Gen. Nandana Uawatte-press

காவல்துறையினரே குடாநாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அவர்கள் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் தலையிடவில்லை.

குடாநாட்டில் அளவுக்கதிகமான படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை.

வடக்கு மாகாணத்தில் மட்டும் இராணுவ முகாம்கள் இயங்கவில்லை. தேசிய பாதுகாப்பு கொள்கைக்கு அமைய நாடு முழுவதிலும் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

யாழ்.குடாநாட்டில், முன்னர் 152 இராணுவ முகாம்கள் இருந்தன. 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், பாதுகாப்பு நிலைமைகளின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, 59 இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன. தற்போது 93 இராணுவ முகாம்களே இருக்கின்றன.

எனினும், தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய இடங்களில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த 19,159. 38 ஏக்கர் காணிகள் கட்டம்கட்டமாக படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளன.

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த காணிகளில் 50 வீதம் ஏற்கனவே உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 11,629 ஏக்கராக இருந்த உயர் பாதுகாப்பு வலயம் இப்போது  5,371 ஏக்கராக சுருக்கப்பட்டுள்ளது.

இராணுவம் காணிகளை விடுவித்துள்ள போதிலும், அங்கு மக்கள் குடியேற வரவில்லை. அந்த நிலங்களின் உரிமையாளர்கள் வெளிநாடுகளில் உள்ளனர்.

எதிர்காலத்தில் நிலங்களை விடுவிப்பது, அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானத்திலும், பாதுகாப்பு நிலைமைகளிலுமே தங்கியிருக்கிறது.” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *