மேலும்

சிறிலங்கா இராணுவத்தின் துப்பாக்கியாலேயே ரவிராஜ் படுகொலை – நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

N.Ravirajதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, சிறிலங்கா இராணுவத்துக்குச் சொந்தமானது என்று கண்டறியப்பட்டுள்ளதாக, குற்றப்புலனாய்வு பிரிவினர்,இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். 

ரவிராஜ் படுகொலை வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்தப் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், முச்சக்கர வண்டியொன்று தற்போது கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டனர்.

அந்த முச்சக்கரவண்டியை தமது பொறுப்பில் வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதியளிக்குமாறும், நீதிமன்றத்திடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோரிக்கை விடுத்திருந்தது.

அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிவான், சம்பந்தப்பட்ட முச்சக்கர வண்டியை காவல்துறை பாதுகாப்பில் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கினார்.

இதேவேளை, சிறிலங்கா இராணுவத்துக்கு சொந்தமான துப்பாக்கி இந்தப் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்டது எப்படி என்பது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு எதிர்வரும் 19 ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன்,  சந்தேகநபர்களான சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் ஐவரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *