மேலும்

துறைமுக நகரத் திட்டத்துக்காக இந்தியாவிடம் கையேந்தும் சீனா

maithri-xi (1)தற்போது கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தைத் தொடர்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றுத் தருமாறு சீனா, இந்தியாவிடம் கையேந்தி நிற்கிறது. இது நடைமுறை உண்மையாகும்.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

கொழும்பில் போக்குவரத்து நெரிசலில் அகப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றில் ‘நாங்கள் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்திற்கு ஆதரவளிக்கிறோம்’ என்கின்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. முச்சக்கர வண்டியின் நடுவில் பூர்த்தியாக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் ஒளிப்படமும் காணப்பட்டது.

இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் குறித்த வாடகை முச்சக்கர வண்டி ஓட்டுநரிடம் வினவிய போது, இவ்வாறான ஒரு சுவரொட்டியைத் தனது வாகனத்தில் ஒட்டுமாறு தனக்குப் பணிக்கப்பட்டதாகவும் அதற்காக பணம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதுபோன்ற பல வாடகை முச்சக்கர வண்டிகளில் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை ஆதரிப்பது தொடர்பான வாசகம் மற்றும் ஒளிப்படத்தை ஒட்டுவதற்கு அதிக நிதி செலவிடப்பட்டிருக்கும்.

இத்திட்டத்தை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் இடைநிறுத்திய பின்னர் சீன அரசாங்கம் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்திற்கு மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக அதிகளவான நிதியைச் செலவிடத் தொடங்கியுள்ளது. துறைமுக நகரத் திட்டத்தை ஆதரிப்பதற்கான சீன அரசாங்கத்தின் பரப்புரையானது சிறிலங்காவிலுள்ள முன்னணி விளம்பரதாரர் நிறுவனம் ஒன்றினால் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த விளம்பரப்படுத்தல் பரப்புரையைத் தொடர்ந்து கடந்த வாரம் இத்திட்டத்தை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பாகப் பரிசீலிப்பதற்காக சிறிலங்கா பிரதமரின் செயலாளரின் தலைமையில் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காப் பிரதமர் ரணிலின் மைத்துனரான பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் றுவான் விஜயவர்த்தன சிங்கப்பூரில் இடம்பெற்ற சங்ரிலா-2015 மாநாட்டில் (Shangrilla La Dialogue) கலந்து கொண்ட பின்னரே கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தைப் பரிசீலிப்பதற்கான ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரதித் தலைமை அதிகாரியை சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் றுவான் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

‘மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் சீனாவுடன் முறிவடைந்துள்ள உறவை மீண்டும் புதுப்பிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறது. தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள 1.4 பில்லியன் டொலர் பெறுமதியான கொழும்பு துறைமுக நகரத் திட்டமானது சிறிலங்காப் பிரதமரின் செயலாளரின் தலைமையிலான ஆணைக்குழுவால் தற்போது பரிசீலிக்கப்படுகிறது. இந்த ஆணைக்குழு இத்திட்டத்தைத் தொடர்வதிலுள்ள தடைகள் தொடர்பாக ஆராய்கிறது.

இந்நிலையில் சீனாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு மீளவும் நிலைநாட்டப்படும்’ என சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் றுவான் விஜயவர்த்தன, சிங்கப்பூரில் சீன இராணுவ உயர் அதிகாரியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியமை தொடர்பாக ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தித்தாளில் வெளியிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் முப்படைகளின் தளபதிகளுடன் சிங்கப்பூரில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்த சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் றுவான் விஜயவர்த்தன சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரதி தலைமை அதிகாரியான அட்மிரல் சண் ஜியங்குவாவைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இச்சந்திப்பின் போது, 2014ல் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் கட்டியெழுப்பப்பட்ட பாதுகாப்பு சார் பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளினதும் பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கு ‘மிக முக்கிய பொறிமுறையாகக்’ காணப்படுவதாக இரு தரப்புப் பிரதிநிதிகளும் ஏற்றுக்கொண்டனர் என நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

பாதுகாப்பு விடயங்களில் சீனா தொடர்ந்தும் சிறிலங்காவுக்கு உதவும் என ஜியங்கோ தெரிவித்த அதேவேளையில், இவ்வாண்டு இறுதியில் சிறிலங்காவில் இடம்பெறவுள்ள இரண்டாவது, சிறிலங்கா-சீனா பாதுகாப்பு மாநாட்டில் சீனா பங்களிக்க வேண்டும் எனவும் இதனை சிறிலங்கா மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் றுவான் விஜயவர்த்தன குறிப்பிட்டிருந்தார்.

ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சீனாவின் அணுவாயுத நீர்மூழ்கிக்கப்பல்கள் கொழும்பில் தரித்து நின்றதன் பின்னர் சீனாவுடனான சிறிலங்காவின் பாதுகாப்பு உறவு தொடர்பாக அமெரிக்காவும் இந்தியாவும் விழிப்புடன் உள்ளன. சீன நிதியுதவியுடன் சிறிலங்காவில் அமைக்கப்பட்ட அம்பாந்தோட்டை மற்றும் கொழும்புத் துறைமுகத் திட்டங்கள் மற்றும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் போன்றன இந்திய மாக்கடலில் சீனா தனது செல்வாக்கைப் பலப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் ‘முத்துமாலைத் திட்டத்தின்’ ஒரு பகுதியாகவே நோக்கப்படுகிறது.

மைத்திரிபால சிறிசேன இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் சிறிலங்காவின் அதிபராகப் பொறுப்பேற்ற போது சீனத் திட்டங்கள் சிலவற்றை இடைநிறுத்தியிருந்தார். ஆனால் சீன அரசாங்கம் இதனை நிறுத்த விரும்பவில்லை.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக சீன நிறுவனத்திற்கு சிறியதொரு நிலப்பகுதியை வழங்குவதானது சிறிலங்காவின் இறையாண்மையைப் பாதிக்கின்றது என்பதை அனைத்துலகச் சட்டம் மறுதலிப்பதாக மார்ச் 17 அன்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் பேச்சாளர் சோக் ஜோங்செய்ங் சுட்டிக்காட்டியிருந்தார்.

சீனாவின் விளம்பரப்படுத்தல் பரப்புரை, சிங்கப்பூர் சந்திப்பு மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சீன அதிபருக்கும் இடையிலான சந்திப்பு போன்றன ஒன்றுக்கொன்று தொடர்பற்ற நிலையில் ஆணைக்குழு அமைக்கப்பட்டிருக்கலாம்.

அண்மையில் இந்தியப் பிரதமர் சீனாவுக்குப் பயணம் செய்த போது இவ்விரு நாட்டுத் தலைவர்களும் தென்னாசியா தொடர்பாகவும் சிறிலங்காவின் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடியிருக்கலாம் என ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

சிறிலங்காவின் துறைமுக நகரத் திட்டத்தின் எதிர்காலம் என்ன என்பது தொடர்பாக இந்தியப் பிரதமரிடம் சீனத் தலைமை விசாரித்திருக்காவிட்டால் அது தொடர்பாக ஆச்சரியப்பட்டிருக்க முடியும்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சீனாவுக்கான தனது உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த போது, சிறிலங்கா வாழ் தமிழ் மக்களின் பிரச்சினையை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தீர்க்க வேண்டும் என சீனா அழுத்தம் கொடுக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் கோரியிருந்தார். ஏனெனில் சீனாவுக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான நெருங்கிய உறவுநிலை காரணமாக, மகிந்த மீது சீனாவால் மட்டுமே அழுத்தங் கொடுக்க முடியும்.

இதன் பின்னர் கொழும்பை வந்தடைந்த சீனப் பிரதிநிதிகள் குழு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அழுத்தத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக தமிழர் விவகாரம் தொடர்பாகத் தீர்வு காணவேண்டும் என மகிந்த ராஜபக்சவிடம் கோரியது. இந்த நிலை தற்போது தலைகீழாக மாறியுள்ளது.

தற்போது கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தைத் தொடர்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றுத் தருமாறு சீனா, இந்தியாவிடம் கையேந்தி நிற்கிறது. இது நடைமுறை உண்மையாகும்.

மைத்திரி அரசாங்கம் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்திய பின்னர் சீனா பீதியடைந்தது. கல்விச் சுற்றுலாவில் சீனாவுக்குச் செல்வதற்கான வாய்ப்பு சில சிறிலங்கா ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த ஊடகவியலாளர்கள் சீன அதிகாரிகளைச் சந்தித்த போது துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்தியமை தொடர்பாக கவலை கொள்வதாக சீன அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதன்பின்னரே, இத்திட்டத்தைத் தொடர்வதற்கான பரப்புரைகளில் சீனா ஈடுபடத் தொடங்கியது. இதற்காக, மைத்திரியின் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான பரப்புரைகளில் ஈடுபட்ட முன்னணி விளம்பர நிறுவனம் ஒன்றை சீனா தனது பரப்புரைக்காகத் தேர்ந்தெடுத்தது.

சீனாவால் எடுக்கப்பட்ட இத்தகைய முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் சாதாரணமாக எடைபோட முடியாது. சிறிலங்கா வாழ் மக்களின் கருத்துக்களை மாற்றியமைப்பதற்காக வெளிநாடுகள் நிதி வழங்குவதானது நாட்டின் அபிவிருத்திக்கு குந்தகம் விளைவிக்கும் என சிறிலங்கா அரசாங்கம் கருதுகிறது.

மகிந்தவுடன் சீனத் தூதரக அதிகாரிகள் தற்போதும் தொடர்பைக் கொண்டுள்ளனர் என்பது இரகசியமான விடயமல்ல. மகிந்த மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான சாத்தியம் நிலவுவதாக சீன அரச ஊடகமான Xinhua News Agency  செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் நிரந்தரமாக நிறுத்தப்பட்டால் அதன் பின்னர் எத்தகைய நடவடிக்கைகளை சீனா முன்னெடுக்கும் என்பது தொடர்பாக சிறிலங்காவிலுள்ள சீனத் தூதரக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் சீன நிதியில் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தற்போது அதற்கு எதிராக விதிக்கப்பட்ட தடையையும் மீறியுள்ளதாகத் தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *