மேலும்

கனிமொழியுடன் பேசிய பின்னரே எழிலன் சரணடைந்தார் – நீதிமன்றத்தில் அனந்தி சாட்சியம்

elilanஇறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் சரணடைவு, அனைத்துலகத்தின்,  குறிப்பாக இந்தியாவின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து காணாமல்போயுள்ள தனது கணவரும் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளருமான எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரனை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கோரி, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கில் இன்று சாட்சியமளித்த போதே, அனந்தி சசிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான மூத்த மனித உரிமைகள் சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல்,  இந்த விசாரணை குறித்து கருத்து வெளியிடுகையில்,

“சிறிலங்கா படையினரிடம் விடுதலைப் புலிகள் சரணடைந்த நிகழ்வானது அனைத்துலக ஏற்பாட்டில் இடம்பெற்றது என்றும், குறிப்பாக இந்தியாவும் இதில் பங்கெடுத்திருந்தது என்றும் அனந்தி சசிதரன் தனது சாட்சியத்தில் தெரிவித்திருந்தார்.

தனது கணவர் சிறிலங்கா படையினரிடம் சரணடைவதற்கு முன்னர், அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழியுடன், சரணவடைவது குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அதனைத் தான் அருகில் இருந்து கேட்டதாகவும் அனந்தி தனது சாட்சியத்தில் தெரிவித்தார்” என்று குறிப்பிட்டார்.

சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து காணாமற்போனவர்கள் தொடர்பான ஐந்து ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான விசாரணைகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.

அவற்றில் எழிலன் தொடர்பான வழக்கு விசாரணையில் அவருடைய மனைவி அனந்தி சசிதரன் இன்று சாட்சியமளித்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படுகின்ற நாட்களில் வழக்காளியாகிய அனந்தி சசிதரனும், ஏனைய மனுதாரர்களும் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளதாகவும், குறிப்பாக அனந்தி சசிதரனுக்கு எதிராக வழக்கு நடைபெறும் தினங்களில் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அப்பால், பெயர் குறிப்பிட்டு அச்சுறுத்தும் வகையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், சட்டத்தரணி ரட்னவேல் நீதவானிடம் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து அனந்தி சசிதரனுக்கு பதுகாப்பு வழங்குவதற்கான உத்தரவை நீதிபதி வழங்கினார்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை மாதம் 07ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *