மேலும்

வித்தியா படுகொலை சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

vithya-murder-suspects (3)புங்குடுதீவில் கூட்டுவன்புணர்வுக்குப் பின்னர்  மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு, இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நீதிவான் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, வித்தியா படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 9 சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இவர்களை எதிர்வரும், 15ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இன்றைய விசாரணையின் போது, வித்தியா தரப்பில் சட்டவாளர் கே.வி.தவராசா தலைமையில் ஆறு பேர் கொண்ட சட்டவாளர் குழு முன்னிலையானது.

இவர்கள் வழக்கை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என்று மன்றிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

அத்துடன், மீட்கப்பட்ட தடயப் பொருட்கள், பிரேத பரிசோதனை அறிக்கையில் இடம்பெற்றுள்ள விபரங்களை நீதிமன்றிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட நீதிவான், சந்தேக நபர்களின் இரத்தமாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்புமாறும் பணித்தார்.

அத்துடன் சந்தேக நபர்களின் கைபேசி உரையாடல்கள் பற்றிய விபரங்களைத் திரட்டி மன்றில் சமர்ப்பிக்கவும், நீதிவான் உத்தரவிட்டார்.

vithya-murder-suspects (1)

vithya-murder-suspects (2)

vithya-murder-suspects (3)

ஒன்பதாவது சந்தேக நபரான சுவிஸ் குமார் வெள்ளவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் மன்றில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

ஆனால், அவர் பொதுமக்களால் புங்குடுதீவில் வைத்து காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, அவர் எவ்வாறு தப்பிச் சென்றார் என்ற விபரத்தை காவல்துறை சமர்ப்பிக்க வேண்டும் என்று சட்டவாளர் தவராசா கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, தெளிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிவான் காவல்துறைக்குப் பணித்துள்ளார்.

இன்றைய விசாரணையின் போது, வித்தியாவின் தாயார் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஆகியோரும் நீதிமன்றில் சமூகமளித்திருந்தனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதால், ஊர்காவற்றுறை நீதிமன்றச் சுற்றாடலில் பெருமளவு சிறிலங்கா காவல்துறையினரும் அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *