மேலும்

சிறிலங்கா நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுள்ள மகிந்த ஆதரவாளர்கள்

parliament-seige (1)

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவருக்கு ஆதரவு தெரிவித்தும், சிறிலங்கா நாடாளுமன்ற வளாகப் பகுதியி்ல் பெரியளவிலான எதிர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகிறது.

மாகாணசபை மற்றும், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பி்னர்களால் அழைத்து வரப்பட்ட மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் இன்று காலை 9 மணியளவில்  நாடாளுமன்ற வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை  நோக்கி முன்னேறிச் சென்று அதனை முற்றுகையிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

இதனால் அந்தப் பகுதியில் பெரும் வாகன நெரிசல் தோன்றியுள்ளது.

parliament-seige (2)

parliament-seige (3)

உயர்பாதுகாப்பு வலயப் பகுதியான நாடாளுமன்றப் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு சிறிலங்கா காவல்துறை கடுவெல நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றுள்ளது.

இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், நீதிமன்றத்தினால் ஆர்ப்பாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது என்றும், எனவே ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைந்து செல்லாவிடின் அவர்களின் மீது குறைந்தபட்ச எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும், சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், எந்த நேரத்திலும், நாடாளுமன்ற சுற்றுப்பகுதியில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறையின் நடவடிக்கை இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்துக்கான வீதிகளை மூடியுள்ள சிறிலங்கா காவல்துறையினர், கலகத் தடுப்பு பிரிவு, சிறப்பு அதிரடிப்படைப்பிரிவு ஆகியவற்றையும் அங்கு நிறுத்தியுள்ளனர்.

நீர்ப்பீரங்கி வாகனமும், அந்தப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *