மேலும்

கம்போடியாவுக்கு அகதிகளை அனுப்பும் அவுஸ்ரேலியாவின் திட்டம் கடைசி நேரத்தில் பிசுபிசுப்பு

australiaஅவுஸ்ரேலியாவினால் புகலிடம் நிராகரிக்கப்பட்ட அகதிகளை நௌருவில் இருந்து கம்போடியாவில் குடியேற்றும் திட்டத்துக்கமைய, முதல் தொகுதி அகதிகளை நொம்பென்னுக்கு அனுப்பும் திட்டம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளது.

கம்போடியாவில் குடியேற இணக்கம் தெரிவித்த மூன்று இலங்கையர்கள் உள்ளிட்ட ஐந்து அகதிகளை வாடகை விமானத்தில் கம்போடியத் தலைநகர் நொம்பென்னுக்கு இன்று அனுப்பி வைக்க அவுஸ்ரேலியா நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்தநிலையில், இன்று அகதிகள் வருவதாக கிடைத்துள்ள தகவல்கள் கம்போடிய அரசாங்கத்தை குழப்பமடையச் செய்துள்ளதாக கம்போடிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், கொய் குயோங் தெரிவித்துள்ளார்.

“அவுஸ்ரேலியத் தரப்பின் நடவடிக்கைகளால் கம்போடிய அரசு அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர்.

இன்று நொம்பென்னுக்கு அகதிகள் வருவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். இதுதொடர்பாக அவுஸ்ரேலியாவின் அபோட் அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நௌருவில் இருந்து வரும் அகதிகளை தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை கம்போடிய அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. மீள்குடியமர்வுத் திட்டங்கள் தயாரிக்கப்படவில்லை. இவர்களை எங்கு குடியமர்த்துவது என்று இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் கம்போடிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை, கம்போடியாவில் அகதிகளைக் குடியேற்றும் திட்டத்துக்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாக, தி கார்டியன் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *