மேலும்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பணிப்பாளரை நாடாளுமன்றத்தில் முன்னிலையாக சபாநாயகர் அழைப்பு

Dilrukshi Dias Wickramasinghe- maithriசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, விசாரணைக்கு அழைத்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்சி டயஸ் விக்கிரமசிங்கவை நாடாளுமன்றத்தில் முன்னிலையாகுமாறு, சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் அழைப்பாணை விடுத்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பாணை விடுத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு, எதிர்ப்புத் தெரிவித்து சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 55 பேர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தண்டனை வழங்குதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதனை தடுத்து நிறுத்துமாறு கோரியும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள், கையெழுத்திட்ட கடிதம், சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

இந்தநிலையிலேயே, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்சி டயஸ் விக்கிரமசிங்கவை நாடாளுமன்றத்தில் முன்னிலையாகுமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ச இன்று பிற்பகல், அழைப்பாணை அனுப்பியுள்ளார்.

இதற்கிடையே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் நாடாளுமன்றத்துக்கு வந்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து ஆளும்கட்சி உறுப்பினர்களுடன் முக்கிய சந்திப்பில் ஈடுபட்டார்.

இதேவேளை, சிறிலங்கா அதிபருக்கும் சபாநாயகர் சமல் ராஜபக்சவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *