உள்நாட்டு விசாரணை ஆவணங்கள் ஜூலையில் வெளியிடப்படும் – பிரித்தானியாவிடம் வாக்குறுதி
ஐ.நா விசாரணையாளர்கள் வரும் செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமது அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக, சிறிலங்காவின் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஆவணத்தொகுதி வெளியிடப்படும் என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
பிரித்தானியா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அந்த நாட்டின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் எட் மில்லிபான்டைச் சந்தித்த போதே இந்த வாக்குறுதியை அளித்திருக்கிறார்.
சிறிலங்கா அதிபர் தங்கியிருந்த லண்டன் ஹில்டன் விடுதியில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, பொறுப்புக்கூறும் விவகாரத்தில் உள்நாட்டு விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விபரித்துக் கூறினார்.
வரும் ஜூலை மாதம் இந்த அறிக்கை கிடைக்கும் என்றும் அவர் எட் மில்லிபான்ட்டிடம் கூறினார்.
போருக்குப் பின்னர் சிறிலங்கா இராணுவத்தின் பங்கு குறித்தும், இந்தச் சந்திப்பின் போது, பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் விபரம் கோரியிருந்தார்.
அதேவேளை, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரொனுடனான சந்திப்பின் போது, உள்நாட்டு விசாரணைகளின் கண்டறிவுகள் குறித்து சிறிலங்கா நீதிமன்றங்களே விசாரணை நடத்தும் என்றும் சிறிலங்கா அதிபர் வாக்குறுதி அளித்துள்ளார்.
காணாமற்போனோர் தொடர்பாக மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் பரிந்துரைகள், கண்டறிவுகள் தொடர்பாக, சிறிலங்கா நீதிமன்றங்கள் பொறுப்புக்கூற உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.