நாளாந்தம் 3.8 இலட்சம் டொலர் இழப்பு – சிறிலங்காவுக்கு சீன நிறுவனம் எச்சரிக்கை
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், தமக்கு நாளொன்றுக்கு, 3.8 இலட்சம் டொலர் இழப்பு ஏற்படுவதாகவும், தமது முதலீட்டைப் பாதுகாப்பதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், சீன நிறுவனம் எச்சரித்துள்ளது.
கொழும்புத் துறைமுக நகர கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள, சீன தொடர்பாடல் கட்டுமான நிறுவனமே இந்த எச்சரிக்கையை நேற்று விடுத்துள்ளது.
புதிய அரசாங்கத்தினால் மார்ச் 6ம் நாள் இந்த திட்டப்பணிகள் இடைநிறுத்தப்பட்டதில் இருந்து, இன்று வரை 2.33 மில்லியன் டொலர் இழப்பு தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.
“இறுதியான முடிவு எப்போது அறிவிக்கப்படும் என்று இதுவரை எமக்குத் தகவல் தரப்படவில்லை.
திட்டப்பணிகளை இடைநிறுத்தியதால், நாளொன்றுக்கு எமது நிறுவனத்துக்கு 380,000 டொலர் நேரடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
மறைமுகமாக ஏற்படும் இழப்பு விபரம் இன்னமும் கணக்கிடப்படவில்லை.
பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக , உள்ளூரில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்தப் பணிகளை விரைவாக ஆரம்பிக்காவிட்டால், கடலில் கொட்டி நிரவப்பட்ட கற்களும் மண்ணும், கடல் அலைகளினால் இழுத்துச் செல்லப்பட்டு விடும்.
உண்மையில் கடல் அலைகள் பணத்தை கடலுக்குள் இழுத்துச் செல்கின்றன.
நாளாந்தம் ஏற்படும் நேரடி இழப்புடன், மறைமுக இழப்பையும் சேர்த்து, இழப்புகள் அதிகரித்து வருகின்றன.
எமது நிறுவனத்தை ஓரம்கட்டினால், எம்மைப் பாதுகாக்க சட்ட நடவடிக்கையில் இறங்குவோம்.” என்றும் சீன நிறுவன உயரதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.