மேலும்

நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் சிறிலங்கா – சீனா கூறுகிறது

Chinese Foreign Ministry spokesperson, Hua Chunyingசீன- சிறிலங்கா நட்பின் ஒட்டுமொத்த நலன்களுக்காக, சிறிலங்காவில் முதலீடு செய்துள்ள,  சீன நிறுவனங்களின் நம்பிக்கையை காப்பாற்ற சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சீனா தெரிவித்துள்ளது.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் தொடர்பாகவே சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், ஹுவா சுன்யிங் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பீஜிங்கில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட முடிவு குறித்து, சீனாவுக்கு சிறிலங்கா எவ்வாறு விளக்கமளித்துள்ளது, இதற்கு சீனாவின் பதில் என்ன, இதனால் சீன- சிறிலங்கா உறவுகள் பாதிக்கப்படுமா என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், ஹுவா சுன்யிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், சீன வெளிவிவகார அமைச்சரின் அழைப்பின் பேரில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பெப்ரவரி 27 – 28ஆம் நாள்களில் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, சிறிலங்காவில் அபிவிருத்தி மற்றும் முதலீட்டில் சீன நிறுவனங்களை வரவேற்பதாக தெரிவித்திருந்தார்.

சிறிலங்கா தரப்பில் மேற்கொள்ளப்படும் மீளாய்வு, சிறிலங்காவில் சீனாவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களை மட்டும் அடிப்படையாக வைத்து, நடத்தப்படும் தனித்துவமான ஆய்வு அல்ல.

நல்லதொரு முதலீட்டுச் சூழலை உருவாக்குவதை இலக்காக வைத்து மேற்கொள்ளப்படுகிறது.

சீனாவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்த மீளாய்வு முடிவுகள் குறித்து சிறிலங்கா தரப்பு சீனத் தரப்புடன் நெருக்கமான தொடர்பை பேணும்.

சிறிலங்காவின் புதிய அரசாங்கம், முதலீட்டுச் சூழலை முன்னேற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளை சீனா புரிந்து கொண்டுள்ளதுடன் அதனை மதிக்கிறது.

அத்துடன், சிறிலங்கா தரப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை பொருத்தமான முறையில் தீர்க்கும் என்றும், சீன- சிறிலங்கா நட்பின் ஒட்டுமொத்த நலன்களுக்காக, சிறிலங்காவில் முதலீடு செய்துள்ள,  சீன நிறுவனங்களின் நம்பிக்கையை காப்பாற்றவும், சிறிலங்காவின் தேசிய அபிவிருத்தியில் உள்ள அடிப்படை நலன்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கும் என்றும் சீனா நம்புகிறது” என்றும் பதில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *