மேலும்

மீண்டும் தவறு இழைக்கக் கூடாது – சிறிலங்காவுக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை

zeid-raadசிறிலங்கா அரசாங்கத்தினால் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகள் மீண்டும் இடம்பெறக் கூடாது என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் எச்சரித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடரில் நேற்று அவர், ஆண்டறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றினார்.

அதன்போதே அவர் சிறிலங்காவுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

“ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வில், சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறுதல் தொடர்பான பேரவையின் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் குறித்த எனது அறிக்கையை உறுப்பு நாடுகள் பரிசீலிக்க இருந்தன.

இதில் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை தொடர்பான முடிவுகளும் இடம்பெற்றிருக்கும்.

எனினும், தீவிர ஆலோசனைக்கு பின்னர், விசாரணைக்குழுவின் நிபுணர்களின் ஆலோசனைக்கு ஏற்பவும், குறிப்பிட்ட அறிக்கையை வெளியிடுவதை செப்ரெம்பரில் நடைபெறவுள்ள அமர்வு வரை தாமதிக்குமாறு நான் பரிந்துரை செய்துள்ளேன்.

சிறிலங்காவில் மாற்றமடையும் சூழ்நிலைகள், அரசிடமிருந்து எனக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக கிடைத்துள்ள சமிக்ஞைகள், மேலும் தகவல்கள் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் என்பவை குறித்து மதிப்பிட்ட பின்னரே நான் அவ்வாறு பரிந்துரை செய்தேன்.

எதிர்வரும் செப்ரெம்பர் மாத அமர்வுக்கு முன்னதாக சிறிலங்காவுக்கு வருமாறு எனக்கும், உண்மை – நீதி விடயம் பற்றிய சிறப்பு நிபுணர்களுக்கும், பலவந்தமான காணமற்போதல்கள் தொடர்பான செயற்குழுவுக்கும் சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இக்காலப்பகுதியில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் பணியகம்  கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அதில் தொடர்புட்ட சகலருடனும் பேச்சுக்களை மேற்கொள்ளும்.

சிறிலங்காவில் நீடித்து நிலைக்கக்கூடிய சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அடைவதற்கான, நீதியை நிலைநாட்டுவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு கிடைத்துள்ள தனியானதொரு சந்தர்ப்பம் இது.

கடந்த காலத் தவறுகள் மீண்டும் நிகழாதவாறு நீதியை முன்நகர்த்திச் செல்வதற்குச் சாத்தியமாகக் கூடிய பொறிமுறைகளை வகுக்கின்ற போது, சிறிலங்கா அதிகாரிகள் மக்களுடன், குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களுடன் ஆழமான கலந்துரையாடல்களை நடத்த வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *