மேலும்

கவிழும் நிலையில் கிழக்கு மாகாணசபை – ஆறு உறுப்பினர்கள் ஆதரவை விலக்கினர்

EPC-chiefminister (1)கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைக்க சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கிய ஆதரவை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆறு உறுப்பினர்கள், இன்று விலக்கிக் கொண்டுள்ளனர்.

முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அகமத் தலைமையிலான அரசாங்கத்துக்கு வழங்கிய அதரவை, விலக்கிக் கொள்வதாக, முன்னாள் மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசநாயக்க, முன்னாள் வீதி,நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான ஜயந்த விஜயசேகர, எம்.எல்.அமீர் லெப்பை. டி.வீரசிங்க, ரி.எம்.ஜெயசேன ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இவர்கள் திருகோணமலையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் தமது முடிவை அறிவித்ததுடன்,  இதுதொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கல்வி மற்றும் காணி அமைச்சராக, முன்னாள் தவிசாளர் ஆரியவதி கலப்பதியும், முன்னாள் சுகாதாரண அமைச்சரான எம்.ஐ.எம்.மன்சூர், வீதி அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராகவும் கடந்த வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டதையடுத்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் மோதல் உருவாகியுள்ளது.

கிழக்கு மாகாணசபையில் 14 ஆசனங்களைக் கொண்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவுடன், 7 உறுப்பினர்களைக் கொண்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டிருந்தது.

இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐதேக உள்ளிட்ட கட்சிகளை அதிருப்திக்குள்ளாக்கியது.

எனினும், கிழக்கு மாகாண அமைச்சரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரு அமைச்சர் பதவிகளைப் பெற இணங்கியிருந்தது.

ஆனாலும், முக்கியமான கல்வி மற்றும் காணி அமைச்சுக்களை சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்பட்டதையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றமடைந்துள்ளது.

அமைச்சரவையில் இணைந்து கொள்ளும் முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுபரிசீலனை செய்து வரும் நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆறு உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அரசுக்கான தமது ஆதரவை விலக்கியுள்ளனர்.

இதையடுத்து, 37 பேரைக் கொண்ட கிழக்கு மாகாணசபையில், ஹபீஸ் நசீர் முகமத் தலைமையிலான அரசாங்கம் கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *