மேலும்

ஐ.நா உயர் பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன் கூட்டமைப்பு, மைத்திரியுடன் பேச்சு

Jeffrey Feltman- maithriசிறிலங்காவுக்கு இன்று வருகை தந்த ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உயர்மட்டப் பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இன்று காலை கொழும்பிலுள்ள விடுதியொன்றில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, போர் குறித்த உள்நாட்டு விசாரணை மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு விசாரணைகளில் தமக்கு நம்பிக்கை இல்லை என்பதை ஐ.நா பிரதிநிதியிடம் எடுத்துக் கூறியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அதற்கு, உள்நாட்டு விசாரணைகள் அனைத்துலக தரத்துக்கேற்க நடத்தப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளதாக, ஜெப்ரி பெல்ட்மன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம் தெரிவித்தார்.

அத்துடன், விசாரணை மற்றும் ஏனைய விவகாரங்களில், சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட ஐ.நா விரும்புவதாகவும், அவர் குறிப்பிட்டார்.

வடக்கின் காணிப் பிரச்சினைகள், மற்றும் போரினால் இடம்பெயர்ந்தவர்கள் விவகாரம் என்பன குறித்தும், ஐ.நா பிரதிநிதியிடம் எடுத்துக் கூறியதாகவும், சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Jeffrey Feltman- maithri

இதற்கிடையே, இன்று அதிகாலை கொழும்பு வந்த, ஜெப்ரி பெல்ட்மன் இன்று காலையில், சிறிலங்கா பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேராவையும், பிற்பகலில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

வரும் 3ம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருக்கும் ஜெப்ரி பெல்ட்மன், பல்வேறு அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

அத்துடன், நாளை மறுநாள் யாழ்ப்பாணம் செல்லவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *