மேலும்

சீன நீர்மூழ்கிகளை மீண்டும் சிறிலங்கா வர இடமளியோம் – பீஜிங்கில் மங்கள சமரவீர

சீன நீர்மூழ்கிகள் கடந்த ஆண்டைப் போல மீண்டும் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தருவதற்கு சிறிலங்காவின் புதிய அரசாங்கம் அனுமதிக்காது என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சீன பிரதமர் லி கிகியாங், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

இன்று பீஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், முன்னைய அதிபர் மகிந்த ராஜபக்சவைப் போல, சீன நீர்மூழ்கிகள் சிறிலங்கா துறைமுகத்தை அணுக புதிய அரசாங்கம் அனுமதிக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்,

“ஜப்பானியப் பிரதமர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த நாளில், சீன நீர்மூழ்கிகள் கொழும்புத் துறைமுகத்தை அடைய வழிவகுத்த சூழல் என்னவென்று எனக்கு உண்மையிலேயே தெரியாது.

ஆனால் நாம் அத்தகைய சம்பவங்கள், எமது பதவிக்காலத்தில் எந்தத் தரப்பில் இருந்தும் நிகழாது என்பதை உறுதிப்படுத்துவோம்.

புதிய அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை மையத்துக்கு மீண்டும் நகர்த்தப்படும். அதன் மூலம் இன்னும் கூடுதலான நடுநிலை நிலைப்பாடு ஏற்படுத்தப்படும்.

நடுநிலைக்குத் திரும்புதல் என்பது,  ராஜபக்சவினால் சீனாவுடன் ஏற்படுத்தப்பட்ட நெருக்கமான உறவை நீர்த்துப் போகச்செய்வதல்ல.

நடுநிலைக்குத் திரும்புவதால் சீனாவுடன்  சிறிலங்கா கொண்டுள்ள உறவுகளை எந்த வகையிலும் பாதிக்காது.

அவர்கள் அந்த இடத்திலேயே இருப்பார்கள். உலகின் மற்ற நாடுகளைப் போலவே, சீனாவுடனான உறவுகளைப் பலப்படுத்தவும் நாம் முயற்சிப்போம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *