மேலும்

மகிந்த ஆட்சிக்காலத் திட்டங்களின் இன்றைய நிலை – ஏஎவ்பி

mathala-airport-emptyம்பாந்தோட்டையில் 15.5 மில்லியன் டொலர் செலவில் மாநாட்டு மண்டபம் அமைக்கப்பட்டது. 2013 பொதுநலவாய மாநாடு இடம்பெற்ற பின்னர், இந்த மண்டபம் வெறுமையாகக் காணப்படுகிறது. இதில் தற்போது திருமண விழாக்களும் இடம்பெறுகின்றன.

இவ்வாறு ஏஎவ்பி செய்தி நிறுவனத்துக்காக அமால் ஜெயசிங்க எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

ல மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட விமான நிலையம் விமான சேவையினரால் புறக்கணிக்கப்பட்டதிலிருந்து, ஆடம்பரமான துடுப்பாட்ட அரங்கம் விளையாட்டு வீரர்களால் நிராகரிக்கப்பட்டது வரையான விடயங்களை நோக்குகின்ற போது, மேலதிக செலவீனங்களை எதிர்காலத்தில் தவிர்ப்பதென தற்போதைய புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதையே வெளிக்காட்டுகிறது.

முன்னைய அதிபர் மகிந்த ராஜபக்ச தனது ஆட்சி அதிகாரத்தின் மூலம் சிறிலங்காவை பிராந்திய வர்த்தக மையமாக மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். இதன் ஒருகட்டமாக இவர் தனது சொந்த இடமான அம்பாந்தோட்டையை கலைத்துறை மையமாக மாற்றவேண்டும் எனக் கட்டளையிட்டிருந்தார்.

பத்தாண்டாக சிறிலங்காவை ஆட்சி செய்த மகிந்த ராஜபக்ச மிகப் பாரிய திட்டங்களின் பின்னால் தனது பெயரை வைத்திருந்தார். ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் பல்வேறு ஊழல் மோசடிகள் மற்றும் குடும்ப ஆட்சியால் நாட்டை மிகவும் மோசமான நிலைக்கு இட்டுச்சென்றதன் காரணத்தாலேயே கடந்த மாதம் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.

ராஜபக்ச அரசாங்கம் தனது ஆட்சியின் போது பல பில்லியன் டொலர்களைக் கடனாகப் பெற்றுள்ளது.

‘பொருளாதார ரீதியாக நோக்கில், முதலீடுகளை நாங்கள் இரத்துச் செய்ய வேண்டிய நிலையிலுள்ளோம். நாங்கள் நீண்ட காலத்தின் பின்னரே கடன்களை மீண்டும் வழங்க முடியும். ஆனால் அவற்றிலிருந்து நாம் பயனள்ள எதனையும் எதிர்பார்க்க முடியாது’ என நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் துறையின் பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரட்ண குறிப்பிட்டுள்ளார்.

210 மில்லியன் டொலர்கள் கடனாகப் பெறப்பட்டு கட்டப்பட்ட ராஜபக்ச அனைத்துலக விமான நிலையம் 2013ல் திறந்து வைக்கப்பட்ட பின்னர், இவ்விமான நிலையத்தின் ஊடாக தேசிய விமான சேவையான சிறிலங்கன் எயார்லைன்ஸ் மாத்திரமே பறப்பில் ஈடுபட்டது.

இவ்விமான நிலையத்தின் பயணிகள் காத்திருப்பு மண்டபம் எப்போதும் வெறுமையாகவே காணப்படும்.

இந்த விமான நிலையத்தில் நாளாந்த பயணிகள் சேவை இடம்பெறும் போது மட்டும் இதற்கான நீர் வளங்கள் மற்றும் காற்றுச்சீரமைப்பி போன்றவற்றை இயக்குமாறும் மற்றைய நேரங்களில் இவற்றை நிறுத்திவிடுமாறும் புதிய அரசாங்கம் கட்டளையிட்டுள்ளது.

சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையானது ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தின் ஊடாக தனது பறப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என ராஜபக்ச கட்டளையிட்டிருந்தார். ராஜபக்ச தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் உடனடியாக எயர்லைன்ஸ் விமானசேவை புதிய விமான நிலையத்தின் ஊடான தனது பறப்புக்களை நிறுத்தியது.

இதன்மூலம் இந்த விமானசேவையானது ஆண்டுதோறும் 18 மில்லியன் டொலர்களை சேமிக்க முடியும் என மதிப்பிடப்படுகிறது.

பறவைகள் தங்குமிடத்தில் கட்டப்பட்டுள்ள இந்த விமானநிலையத்தில் விமானங்களும் பறவைகளும் மோதிய சம்பவங்களும் உண்டு.

மிக அண்மைக்காலத்தில் ராஜபக்ச அனைத்துலக விமான நிலையமானது ‘வெள்ளை யானைகளின் சுற்றுலா’ மையமாக மாறியுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே.

‘இந்த இடத்தைப் பலப்படுத்த வேண்டியது எனக்கான சவாலாகும். ஏனெனில் விமானங்கள் பறப்பில் ஈடுபடாத ஒரு விமான நிலையமாக இது காணப்படுகிறது’ என இதன் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் டெறிக் கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து 250 கிலோமீற்றர் தொலைவிலுள்ள அம்பாந்தோட்டை நகரானது விவசாய நிலங்களால் சூழப்பட்ட வறண்ட நிலப்பரப்பாகும். ஆனால் இந்த இடத்தில் பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான திட்டங்களை- பரீட்சார்த்த அறிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு ராஜபக்ச மேற்கொண்டார்.

அதாவது இந்த இடம் தொடர்பான புவிசார் அறிக்கைகள், சூழலியாளர்களின் எச்சரிக்கைகள் மற்றும் யானைகள், சிறுத்தைகள் மற்றும் கரடிகள் போன்ற காட்டு மிருகங்களின் தங்குமிடமாக அம்பாந்தோட்டை காணப்படுவதாக எச்சரிக்கப்பட்ட போதிலும் இவற்றை எல்லாம் அசட்டை செய்துவிட்டு ராஜபக்ச தனது திட்டத்தை அமுல்படுத்தினார்.

அம்பாந்தோட்டையில் சீனாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட 361 மில்லியன் டொலர் பெறுமதியான துறைமுக அபிவிருத்தியும் கடன் திட்டமாகும். இந்தியக் கப்பல்கள் இங்கு தரித்து நிற்பதன் மூலமாவது இத்துறைமுகத்திலிருந்து வருமானத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

அம்பாந்தோட்டை மாவட்டத்திற்குள் ஆறு நிரல்களைக் கொண்ட நெடுஞ்சாலை ஒன்றை ராஜபக்ச அரசாங்கம் அமைத்தது. இதற்காக 52 மில்லியன் டொலர் பெறுமதியான மேம்பாலம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

தொடருந்துப் பாதை விரிவாக்கப்பட்டுள்ளதுடன், பிறிதொரு அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கான பணிகளும் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.

இவை அனைத்தும் ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களாகும். இவற்றுக்கு பல மில்லியன் டொலர்கள் தேவையாக உள்ளன.

அம்பாந்தோட்டையில் 15.5 மில்லியன் டொலர்கள் செலவில் மாநாட்டு மண்டபமும் அமைக்கப்பட்டது. 2013 பொதுநலவாய மாநாடு இடம்பெற்றதன் பின்னர், இந்த மண்டபம் வெறுமையாகக் காணப்படுகிறது. இதில் தற்போது திருமண விழாக்களும் இடம்பெறுகின்றன.

இதுபோன்று அம்பாந்தோட்டையில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் தாவரவியல் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வேற்றிடத் தாவரங்களைப் பராமரிப்பதற்காக நாள்தோறும் பல தொன் நீர் தேவைப்படுகிறது.

மழைவீழ்ச்சி அதிகம் கிடைக்கப் பெறாத அம்பாந்தோட்டை வாழ் கிராமத்தவர்கள் தமக்குத் தேவையான குடிநீரை இந்தப் பகுதியிலிருந்தே பெறவேண்டும். இந்நிலையில் இவர்கள் நீரைப் பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்குகிறார்கள்.

‘நாங்கள் இங்கு வேற்றிடத்து தாவரங்களை வளர்க்கிறோம். அவை ஈரவலயத் தாவரங்களாகும்’ என பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாடு இடம்பெற்ற போது ராஜபக்சவால் திறந்து வைக்கப்பட்ட இத்தாவரவியல் பூங்காவின் பாதுகாவலர் தெரிவித்தார்.

‘இங்கு நீர் எவ்வளவு தூரம் விரயமாக்கப்படுகிறது என்பது மக்களுக்குத் தெரியும் போது நிச்சயமாக கலவரம் ஏற்படும். இந்தப் பகுதியில் தாவரங்களைப் பாதுகாத்து வைப்பதற்கான திட்டமே இதுவாகும் என நாம் கருதுகிறோம். ஆனால் தாவரங்களைப் பராமரிப்பதற்கு பெருமளவான நீர் தேவைப்படுவதால் இத்திட்டம் நீடித்து நிலைக்கக் கூடியதல்ல’ என தனது பெயரைத் தெரிவிக்க மறுத்து விட்ட பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் இவ்வாறு தெரிவித்தார்.

2011 உலகக் கோப்பைக்கான இரண்டு ஆட்டங்கள் சிறிலங்காவில் இடம்பெற்ற போது அதற்காக அம்பாந்தோட்டையில் வடிவமைக்கப்பட்ட துடுப்பாட்ட அரங்கத்திற்கு அருகிலும் நீர்த் தட்டுப்பாடு காணப்படுகிறது.

ஆகக்குறைந்த ஆட்டங்கள் மட்டுமே இடம்பெறும், 35,000 இருக்கைகளைக் கொண்ட இந்த அரங்கத்திற்காக சிறிலங்கா துடுப்பாட்ட சபை கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

‘இவ்வாறான திட்டங்களை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதை வரையறுப்பது மிகவும் கடினமானதாகும். முதற்கட்டமாக நாங்கள் கடன்களை வகைப்படுத்தவுள்ளோம். ஐந்து தொடக்கம் ஏழு சதவீதத்திற்கு வாங்கப்பட்ட கடன்கள் தொடர்பாக மீளவும் பேச்சுக்களை நடத்த விரும்புகிறோம். இதன் அரை சதவீதத்திற்கு மேல் எங்களால் கட்ட முடியாது’ என சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுக் கடன்கள் உட்பட நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக முன்னைய அரசாங்கம் உண்மைகளை வெளியிட மறுத்துள்ளதாகவும் இத்திட்டங்கள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தப் போவதாகவும் தற்போதைய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

‘இது மிகவும் பயங்கரமான விரயமாகும்’ என அமைச்சர் விக்ரமரட்ண குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *