மேலும்

ஐதேகவுடன் இணைந்து தேசிய அரசு அமைக்க சுதந்திரக் கட்சி இணக்கம் – தேர்தல் பிற்போடப்படலாம்?

nimal-maitripalaஇந்த ஆண்டு நடுப்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தாமல், ஐதேகவுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது.

கடந்த சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டுநாயக்கவில் உள்ள விடுதியொன்றில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நடத்தப்பட்ட சிறப்புக் கருத்தரங்கு ஒன்றிலேயே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருத்தரங்கிற்கு சிறிலங்கா அதிபரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கியிருந்தார்.

புதிய அரசாங்கத்தின் 100 நாள் செயற்திட்டத்தையடுத்து, நாடாளுமன்றத்தைக் கலைப்பதே முன்னைய திட்டமாக இருந்தது.

ஆனால், அவ்வாறு நாடாளுமன்றத்தை உடனடியாக கலைக்காமல், தேசிய அரசாங்கத்தை அமைக்கலாம் என்று ஐதேக யோசனை கூறியிருந்தது.

இதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பத்தில் எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும், தற்போது  தேசிய அரசாங்கத்தை அமைக்க இணங்கியுள்ளது.

அவ்வாறு அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை 45 ஆக அமைய வேண்டும் என்றும், அதில் 17 அமைச்சுக்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சில நிபந்தனைகளின் அடிப்படையில்,புதிய அரசாங்கத்தின் அரசியலமைப்பு திருத்தங்களுக்கு ஆதரவு வழங்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் ஆட்சி முறைமை மாற்றப்படும் போது தேர்தல் முறையும் மாற்றப்பட வேண்டும் என்பதே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாக உள்ளது.

அதேவேளை, இந்தக் கருத்தரங்கில் 2016 ஆம் ஆண்டு வரை தேர்தலை நடத்தாமல் தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்தும் ஆராயப்பட்டது. ஆனாலும் எந்த விடயம் குறித்தும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை” என்று கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால், அடுத்த ஆண்டு, ஏப்ரல் மாதமளவில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படலாம்.

அதேவேளை, நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்தாமல், தேசிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளுக்கு ஜேவிபி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இது அதிபர் தேர்தலுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு மாறாது என்றும், தேசிய அரசாங்கத்தில் தமது கட்சி இணையாது என்றும் ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *