மேலும்

திருப்பதியில் மைத்திரிக்கு சங்கடம்: திறக்க மறுத்தது கருவறை தங்கக் கதவு – பூட்டை உடைத்து தரிசனம்

maithri-thirupathi (1)திருப்பதி ஆலயத்தில் நேற்று அதிகாலையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வழிபாடு நடத்தச் சென்ற போது, ஏழுமலையானின் கருவறை தங்கக் கதவு திறக்கப்பட முடியாமல் பூட்டிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடைசியில் தங்கக் கதவின் பூட்டை உடைத்து சிறிலங்கா அதிபரை வழிபாடு நடத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் இதுபோன்றதொரு சம்பவம் இதற்கும் முன் நிகழ்ந்திருக்கவில்லை என்று ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை வழிபாடு செய்வதற்காக நேற்று அதிகாலையில் மைத்திரிபால சிறிசேன தனது மனைவியுடன் சென்றிருந்த போது, தங்கக் கதவின் பூட்டு திறக்க மறுத்ததால், அதிகாரிகள் சங்கடத்துக்குள்ளாகினர்.

அதிகாலையில் 2.15 மணியளவில், ஏழுமலையான் ஆலய பூசகர்கள் கடைசியில் உள்ள மூலஸ்தான தங்கக் கதவை திறப்பதற்காக வந்தனர்.

தினமும், ஏழுமலையானைத் துயிலெழுப்பும் சுப்ரபாதசேவை தான் முதலில் நடப்பது வழக்கம்.

அதிகாலை 3 மணிக்கு நடைபெறும் சுப்ரபாத சேவைக்காக, 45 நிமிடங்களுக்கு முன்னரே கருவறையின் தங்கக் கதவைத் திறந்து சுத்தம் செய்ய பூசகர்கள் வந்திருந்தனர்.

தங்கக் கதவைத் திறப்பதற்கு, அதில் உள்ள சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பூட்டில், மூன்று சாவிகளை ஒரே நேரத்தில், போட்டுத் திறக்க வேண்டும்.

ஆனால், நேற்று அதிகாலையில் முதலாவது சாவி பூட்டினுள் நுழைய மறுத்தது.

மைத்திரிபால சிறிசேனவும், அவரது மனைவி ஜெயந்தி புஸ்பகுமாரியும், சுப்ரபாத சேவையில் தரிசனம் செய்வதற்காக, தங்கக் கதவுகள் திறக்கப்படுவதற்காக ஏற்கனவே வைகுண்ட வளாகத்துக்கு முன்பாக உள்ள மகாத்துவாரம் பகுதியில் காத்துக் கொண்டிருந்தனர்.

maithri-thirupathi (1)

maithri-thirupathi (2)

maithri-thirupathi (3)

maithri-thirupathi (4)

 
ஆனால், திறக்க மறுத்து தங்கக் கதவின் பூட்டுடன் பூசகர்கள் போராடிக் கொண்டிருந்தனர்.

கதவு திறக்க மறுத்ததை பூசகர்கள், திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினர்.

முக்கிய பிரமுகரான சிறிலங்கா அதிபர் காத்திருப்பதை உணர்ந்து தேவஸ்தான அதிகாரிகள், பூட்டை உடைத்து தங்கக் கதவைத் திறக்க உத்தரவிட்டனர்.

இதையடுத்து, பூட்டு உடைக்கப்பட்டு தங்கக் கதவு திறக்கப்பட்ட, அதிகாலை 3 மணியளவில் சுப்பிரபாத சேவை வழக்கம் போல் நடத்தப்பட்டது.

முதல்நாளான செவ்வாய்க்கிழமை இரவு ஏகாந்த சேவையின் பின்னர், பூசகர்கள், கதவை மூடும் வரையில், தங்கக் கதவின் பூட்டு சரியாகவே வேலை செய்தது, ஆனால், அதிகாலையில் அது திறக்க மறுத்த்தால், பூட்டை உடைத்து திறந்தோம் என்று ஆலயத்தின் பிரதி நிறைவேற்று அதிகாரியான சின்னம்கரி ரமணா தெரிவித்துள்ளார்.

ஆலயத்தில் போடப்பட்டுள்ள பூட்டுகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டவை. இத்தகைய பிரச்சினை ஏற்பட்டது இதுவே முதல் முறை என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *