மேலும்

ஐ.நா பொதுச்செயலரைச் சந்தித்தார் மங்கள சமரவீர

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நியுயோர்க்கில் நேற்றுச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஐ.நாவுக்கு சிறிலங்காவுக்கும் இடையிலான ஒத்துழைப்புகள் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக, ஐ.நா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் முக்கியமான நடவடிக்கையான 100 நாள் செயற்திட்டத்துக்கு, மங்கள சமரவீரவிடம், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் ஆதரவையும், ஊக்குவிப்பையும் வெளிப்படுத்தினார்.

மனித உரிமைகள், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகிய சிறிலங்காவின் சிக்கலான விவகாரங்கள் குறித்து, பான் கீ மூனும், மங்கள சமரவீரவும் கலந்துரையாடினர்.

சிறிலங்காவில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான ஐ.நாவின் திட்டங்கள் தொடரும் என்றும், சிறிலங்காவுக்கும் அதன் மக்களுக்கும் ஐ.நாவின் உதவிகள் தொடர்ந்து கிடைக்கும் என்றும், ஐ.நா பொதுச்செயலர் உறுதியளித்துள்ளார் என்றும் அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன், ஐ.நாவுக்கான பிரதிநிதி பாலித கொஹன்னவும், ஐ.நா பொதுச்செயலருடன்  ஐ.நா உதவிச் செயலர் ஒஸ்கார் பெர்னான்டஸ் தரங்கோவும் கலந்து கொண்டார்.

இந்தச் சந்திப்பை ஒளிப்படம் எடுக்க செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஐ.நாவின் அதிகாரபூர்வ  ஒளிப்படப்பிடிப்பாளர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.