முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க கைது
ஐதேகவின் முன்னாள் பொதுச்செயலரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அதிபர் தேர்தலின் போது, போலியான உடன்பாட்டுப் பத்திரங்களைத் தயாரித்து வெளியிட்ட குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
இன்று மதியம் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வைத்து விசாரணை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்கவை, வரும் 11ம் நாள் வரையில் விளக்கமறியலில் வைக்க கோட்டே நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த அதிபர் தேர்தலின் போது மகிந்த ராஜபக்சவின் பக்கம் தாவிய திஸ்ஸ அத்தநாயக்க, ரணில் விக்கிரமசிங்கவும், மைத்திரிபால சிறிசேனவும் கையெழுத்திட்ட இரகசிய உடன்பாடு என ஆவணம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அது போலியானது என்று ஐதேக தரப்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில், அந்த ஆவணம் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.
அந்த ஆய்வில் அது போலியான கையெழுத்து என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.