மேலும்

வட மாகாணசபைக்கு எல்லா சுதந்திரமும் உள்ளதாம் – தந்தி தொலைக்காட்சியில் மகிந்த

mahinda-vajraதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் உள்ள வடக்கு மாகாணசபைக்கு, தேவையான எதையும் செய்வதற்குரிய சுதந்திரம் இருப்பதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து ஒளிபரப்பாகும் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர், வடக்கு மாகாணசபைக்கு எந்த அதிகாரங்களும் அளிக்கப்படவில்லை என்றும், ஆளுனரால் சமாந்தரமான நிர்வாகம் நடத்தப்படுவதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார்.

இந்தச் செவ்வியில் அவர், “தேவையான எதையும் செய்வதற்குரிய சுதந்திரம் அவர்களுக்கு (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) உள்ளது.

துரதிஸ்டவசமாக அவர்கள் அதைச் செய்யவில்லை. அவர்களை அதனைச் செய்ய விரும்பவில்லை.

மக்களுக்குத் தேவையானதை வழங்குவதற்கு அவர்கள் திறமையற்றவர்களாக இருக்கின்றனர்.

ஆனால், அவர்கள் என் மீதும், ஆளுனர் மீதும் பழியைப் போடுகிறார்கள்.

அவரால் (விக்னேஸ்வரன்) அதனைச் செய்ய முடியும். அவர்களுக்கு நாம் பணத்தை அனுப்புகிறோம். முடிவு செய்ய வேண்டியது அவர்கள் தான்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களுக்கு எதிரானவர் என்று தனக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளித்துள்ள, மகிந்த ராஜபக்ச,

“தமிழர்களுக்கு எதிரானவனான நான் எப்படி இருக்க முடியும்?

இதுபற்றி எனது அமைச்சரவையில் உள்ள தமிழ் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்பதே நல்லது.

தமிழர்களுக்கு எதிராக என்னால் செயற்பட முடியாது.

எனது  மருமகள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழரை திருமணம் செய்துள்ளார். இன்னொரு மருமகள் கண்டியை சேர்ந்த முஸ்லிமை மணம் செய்துள்ளார்.

நாங்கள் உறவுகளைக் கொண்டிருக்கிறோம். தமிழ், முஸ்லிம், சிங்களவர்களிடையே திருமண உறவுகள் நிகழ்கின்றன.

நான் எப்போதுமே, அனைவரையும் சமமாகவே நடத்துகிறேன்.

நான் இந்த நாட்டின் அதிபர். என்னால், சமயம் சார்ந்தோ, இனம்சார்ந்தோ ஒருபக்க நிலைப்பாட்டை எடுக்க முடியாது.

எமது வாக்குகளை கைப்பற்றுவதற்காக எதிர்க்கட்சிகள் எம் மீது சேற்றை வாரி வீசுகின்றனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *