மேலும்

கூட்டமைப்பின் முடிவு இன்று அறிவிப்பு – மைத்திரி பக்கம் சாய்கிறது?

tnaசிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான அறிவிப்பு இன்று காலை கொழும்பில் நடக்கவுள்ள செய்தியாளர் சந்திப்பின் போது,  வெளியிடப்படவுள்ளது.

இன்று காலை 10.30 மணியளவில் ஜானகி விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, செய்தியாளர் சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான, அறிவிப்பை, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிடவுள்ளார்.

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருப்பதாகவும், எனினும், தேர்தல் பரப்புரைகளில் இணைந்து பங்கேற்காது என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த நிலைப்பாட்டை கூட்டமைப்பு எடுத்ததற்குரிய காரணங்களை இன்றைய செய்தியாளர் சந்திப்பில் இரா.சம்பந்தன் விளக்கிக் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மட்டக்களப்பில் நேற்று நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, அனைத்து தரப்பினரும் தனக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்மக்களும் தனக்கு ஆதரவளித்து வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கிடையே, இன்று நல்லூர் முத்திரைச்சந்தியில் உள்ள கிட்டு பூங்காவில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், மைத்திரிபால சிறிசேனவுடன், முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக கட்சி தலைவர் சரத் பொன்சேகா, மற்றும் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் உள்ளிட்ட எதிரணியின் முக்கிய தலைவர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *