மேலும்

மகிந்தவுக்கு ஆதரவான பரப்புரையில் சிறிலங்கா இராணுவத் தளபதி

daya-rathnayakeசிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க, வடக்கு, கிழக்கில் உள்ள சிறிலங்கா படையினர் மத்தியில், தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டுள்ளதாக, ஐதேக குற்றம்சாட்டியுள்ளது.

கொழும்பில் நேற்று நடந்த எதிரணியின் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர,

“சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக, வடக்கு, கிழக்கில் உள்ள சிறிலங்கா படையினர் மத்தியில், இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்.

இது தேர்தல் விதிமுறைகளை மீறுகின்ற செயல். இதுகுறித்து அனைத்துலக தேர்தல் கண்காணிப்பாளர்களிடம் முறைப்பாடு செய்யப்படும்.

சிறிலங்கா படையினரை இவ்வாறு அரசியல் வேலையில் ஈடுபடுத்துவது, சீருடையின் கௌரவத்தை அழிக்கின்ற செயலாகும்.” என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய நிராகரித்துள்ளார்.

மேலும், சிறிலங்கா அதிபருக்கு ஆதரவான பரப்புரையில், படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது என்றும், அவர் கூறியிருக்கிறார்.

எனினும், அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், சிறிலங்கா இராணுவத் தளபதி, லெப். ஜெனரல் தயா ரத்நாயக்க, கிழக்கு மற்றும் வடக்கிலுள்ள இராணுவத் தளங்களுக்கு சென்று கூட்டங்களை நடத்தியுள்ளார்.

Jaffna

கடந்த 8ம் நாள், வெலிக்கந்தையில் உள்ள கிழக்குப் பிராந்தியப் படைத் தலைமையகத்தில், ஆயிரக்கணக்கான படையினரை சந்தித்து உரையாற்றிய சிறிலங்கா இராணுவத் தளபதி, நாடு வெளிநாட்டுச் சூழ்ச்சியை எதிர்கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.

அதிலிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டியது படையினரின் பொறுப்பு என்று குறிப்பிட்ட அவர், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரினால் படையினருக்கு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சலுகைகள், வசதிகள் குறித்தும் எடுத்துக் கூறியிருந்தார்.

இதன் பின்னர், கடந்த 12ம் நாள், வன்னிப்படைகளின் தலைமையகத்திலும், மன்னாரில் உள்ள 54வது டிவிசன் தலைமையகத்திலும் படையினர் மத்தியில் இவர் உரையாற்றியிருந்தார்.

கடந்த 15ம் நாள், யாழ்ப்பாண படைகளின் தலைமையகத்திலும், கிளிநொச்சிப் படைகளின் தலைமையகத்திலும், முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்திலும், சிறிலங்கா இராணுவத் தளபதி படையினர் மத்தியில் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *