மேலும்

ஆழிப்பேரலையில் உயிர் தப்பியதால் உலகப்புகழ் பெற்ற அபிலாஸ் – அனைத்துலக நிறுவனங்களின் போலியான வாக்குறுதிகள்

Abilash Jeyarajஆழிப்பேரலை அனர்த்தத்திலிருந்து அபிலாஸ் மயிரிழையில் உயிர்தப்பியதால் மட்டுமன்றி இவனை மீண்டும் இவனது பெற்றோர் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு 52 நாட்கள் நீதிக்காகப் போராடியதாலேயே இன்றளவும் அபிலாசின் பெயர் உலகம்பூராவும் பிரபலம் பெற்றிருப்பதற்குக் காரணமாகும்.

இவ்வாறு dpa – International ஊடகத்திற்காக Anthony David எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

ஒரு பொறியியலாளனாக வருவதே தனது எதிர்கால இலட்சியம் என சிறிலங்காவின் கிழக்குக் கரையோரக் கிராமம் ஒன்றில் வசிக்கும் பத்து வயதான அபிலாஸ் ஜெயராஜ் தெரிவித்தார்.
டிசம்பர் 26, 2004 அன்று இந்திய மாக்கடலில் ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தின் விளைவாக சிறிலங்காவின் தலைநகரான கொழும்பிற்குக் கிழக்காக 306 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கிழக்கு மாகாண கரையோரக் கிராமமான கல்முனையும் பாதிப்பிற்கு உள்ளாகியது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த அபிலாஸ் என்கின்ற இந்தச் சிறுவன் மயிரிழையில் உயிர்தப்பினார். ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்ட போது இந்தச் சிறுவன் பிறந்து 67 நாட்கள் மட்டுமே ஆகியிருந்தன.

“ஆழிப்பேரலை இடம்பெற்ற போது எனது பெயர் சிறிலங்காவில் மட்டுமல்ல அனைத்துலக மட்டத்திலும் பிரபலம் பெற்றதாக எனது பெற்றோர் என்னிடம் கூறியுள்ளனர்” என பகுதியளவில் கட்டப்பட்டிருந்த மூன்று அறைகளைக் கொண்ட தனது வீட்டிலிருந்தவாறு அபிலாஸ் தெரிவித்தார்.

ஆழிப்பேரலை அனர்த்தத்திலிருந்து அபிலாஸ் மயிரிழையில் உயிர்தப்பியதால் மட்டுமன்றி இவனை மீண்டும் இவனது பெற்றோர் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு 52 நாட்கள் நீதிக்காகப் போராடியதாலேயே இன்றளவும் அபிலாசின் பெயர் உலகம்பூராவும் பிரபலம் பெற்றிருப்பதற்குக் காரணமாகும்.

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போது அபிலாஸ் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு வாழைத் தோட்டம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட பின்னர் இவனை ஒன்பது தம்பதியினர் தமது மகன் என உரிமை கோரினர். ஆனால் இது தொடர்பாக நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு மரபணுப் பரிசோதனையையும் மேற்கொண்டது.

இவனது சொந்த ஊரான கல்முனை வைத்தியசாலையில் ஆழிப்பேரலையின் பாதிப்பால் 81வதாக அனுமதிக்கப்பட்டதன் காரணமாக அபிலாஸ் ‘குழந்தை 81’ என்கின்ற பெயரால் அழைக்கப்பட்டார். “ஆழிப்பேரலை அனர்த்தத்திலிருந்து நான் தப்பியது மிகவும் அதிசயமான செயல் என எனது பெற்றோர் கூறியுள்ளனர். என்னைப் பற்றி ஊடகங்களில் வந்த ஆக்கங்கள், செய்திகள் மற்றும் ஒளிப்படங்களைப் பெற்றோர் எனக்குக் காண்பித்துள்ளனர்” என சிறிலங்காவின் தலைநகரிலிருந்து 265 கிலோமீற்றர் தொலைவில் உள்ள குருக்கள்மடம் என்கின்ற சிறிய கிராமத்தில் தனது பெற்றோருடன் வாழும் அபிலாஸ் தெரிவித்தார்.

“மண்சரிவு, வெள்ளப்பெருக்கு மற்றும் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான செய்திகளை அறிவதில் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் தொடர்பான ஒளிப்படங்களைப் பார்க்கும் போதெல்லாம் நான் ஆர்வமாக உள்ளேன்” என அபிலாஸ் கூறுகிறார்.

பத்து வயதேயான இந்தச் சிறுவன் கற்றலிலும் சிறந்து விளங்குகிறான். ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் இவர் சித்தியடைந்துள்ளான். “நான் நன்றாகக் கல்வி கற்று பொறியியலாளனாக வர விரும்புகிறேன்” என அபிலாஸ் தெரிவித்தார்.

“நான் ஆழிப்பேரலையிலிருந்து உயிர்தப்பியவன் என எனது நண்பர்களுக்குத் தெரியும். வெள்ளப்பெருக்குத் தொடர்பாகவும் வாரஇறுதி நாட்களில் தாங்கள் கடற்கரைக்குச் செல்வது தொடர்பாகவும் எனது நண்பர்கள் என்னிடம் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் கடலுக்குச் செல்வது எனக்கு விருப்பமில்லை” என்கிறார் அபிலாஸ். இவர் தனது மூன்று வயதான சகோதரி அபிசாவுடன் இணைந்து தமது முற்றத்தில் துடுப்பாட்டம் விளையாடுவார்கள்.

கல்முனையிலிருந்து வெளியேறி குருக்கள்மடத்தில் வாழ்வதென அபிலாசின் அப்பாவான 40 வயதான சிகையலங்கரிப்பாளரான ஜெயராஜா தீர்மானித்தார். இந்த அடிப்படையில் இவர்கள் தற்போது கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவிலுள்ள குருக்கள்மடத்தில் வாழ்கின்றனர்.

“அபிலாஸ் மிகவும் அமைதியான சிறுவன். இவர் கல்வி கற்பதில் மிகவும் ஆர்வமுள்ளவர். இவர் எல்லோருடனும் நட்பாகப் பழகுவார்” என இவரது வகுப்புத் தோழனான மித்தில் குமார் தெரிவித்தார்.

அபிலாஸ் தொடர்பான செய்தி உள்ளுர் மற்றும் அனைத்துலக ஊடகங்களில் வெளிவந்தபோது, உள்நாட்டு மற்றும் அனைத்துலக நிறுவனங்கள் அபிலாசுக்கு அன்பளிப்புக்கள், நன்கொடைகள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம், புலமைப்பரிசில் போன்றவற்றை வழங்குவதாக வாக்குறுதியளித்தன.

“எமது குழந்தை அபிலாஸ் சிறிலங்காவின் மிகப் பிரபலமான குழந்தையானான். இவனது பெயர் சிறிலங்காவுக்குள் மட்டுமல்ல பல அனைத்துலக நாடுகளிலும் பிரபலம் பெற்றது” என அபிலாசின் தந்தையார் தெரிவித்தார்.

“ஆறு மாதங்களின் பின்னர் பெரும்பாலான வாக்குறுதிகள் போலியானவை மற்றும் அந்தத் தருணத்திற்காக வழங்கப்பட்டவை என்பதை நாங்கள் உணர்ந்துகொண்டோம். தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் நாங்கள் ஒரு தடவை அமெரிக்காவுக்குச் சென்றிருந்தோம்” என அபிலாசின் தந்தையார் தெரிவித்தார்.

“எனக்கு தென்கொரியாவில் தொழில் வாய்ப்பொன்றைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி வழங்கினார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக திரைப்படம் ஒன்றைத் தயாரிப்பதாகவும் கூறியிருந்தார்கள். ஆனால் இவையெல்லாம் இடம்பெறவில்லை. ஆழிப்பேரலைகள் எமது குடும்பத்தைத் தாக்கியது போன்று நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளும் இன்று எமது வாழ்வைப் பாதித்துள்ளன” என முருகப்பிள்ளை தெரிவித்தார்.

அபிலாசின் தந்தையும் இவரது தாயாரான யுவானிற்றா ஜெயராஜாவும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். தாம் அனுபவித்து வரும் துன்பங்களிலிருந்து விரைவில் விடுதலை பெறுவதற்கு தமது சமய நம்பிக்கைகள் தமக்கு உதவும் என இவர்கள் பலமாக நம்புகிறார்கள். “கடவுள் எம்மிடம் எமது குழந்தையைத் திருப்பித் தருவார் என நாம் ஆழிப்பேரலையின் பின்னர் நம்பினோம். அதேபோன்று கடவுள் எம்மிடம் எமது குழந்தையைத் திருப்பித் தந்தார். நாங்கள் இப்போதும் கடவுளை நம்புகிறோம்” என அபிலாசின் தந்தை உறுதிபடத் தெரிவித்தார்.

சிறிலங்காவை ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்ற போது 30,000 இற்கும் மேற்பட்டோர் காவுகொள்ளப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *