மேலும்

மைத்திரியும், கூட்டாளிகளும் சிறிலங்கா அரசின் கண்காணிப்பில்

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் அவரது முக்கியமான உதவியாளர்களும், கண்காணிக்கப்பட்டு வருவதாக, சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து மேலும் தகவல் வெளியிட்ட, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா,

“மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சிகளின் முக்கிய பிரமுகர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து சிறப்புக்கவனம் செலுத்தி அவதானிக்கப்படுகிறது.

மைத்திரிபால சிறிசேன, மங்கள சமரவீர, சம்பிக்க ரணவக்க, ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்டவர்கள் அண்மையில் வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களின் இரகசியங்கள் விரைவில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும்.

இவர்கள் எங்கு தங்கியிருந்தனர், யார் யாரைச் சந்தித்தனர்,  என்னென்ன கலந்துரையாடப்பட்டன, என்பன விரைவில் பகிரங்கப்படுத்தப்படும்.

நவம்பர் 2ம் நாளுக்குப் பின்னர், இவர்கள் சிங்கப்பூரில் ஒரே விடுதியில் வெவ்வேறு காலப்பகுதிகளில் தங்கியுள்ளனர், ஒரே குழுவினருடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

சிங்கப்பூரில் உள்ள ஒரு விடுதி அல்லது இரண்டு விடுதிகளுக்கு இதே காலப்பகுதியில் நாடு கடந்த தமிழீழ  அரசாங்கத்தின் ஆறு பிரதிநிதிகள் வருகை தந்துள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள புலிகளின் தலைவர்கள் கொடுக்கும் டொலர்களுக்காக எதிரணியினர் நாட்டுக்குத் துரோகம் செய்ய முனைகின்றனர்.

மைத்திரிபால சிறிசேன ஒரு அசிங்கமான நிர்வாகி.  ஒரு அமைச்சையே நிர்வகிக்கத் தெரியாதவர் எவ்வாறு நாட்டை நிர்வகிக்கப் போகிறார்.

மகாவலி அபிவிருத்தி அமைச்சை இவர் சரியாக நிர்வகிக்காததால் தான், மொரகஹகந்த, யான்ஓயா திட்டங்களுக்கான வெளிநாட்டு நிதியுதவிகள் திரும்ப நேரிட்டது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *