சிறைக்கைதிகளையும் விட்டுவைக்காத சிறிலங்கா அரசு
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம், அதிபர் தேர்தல் பரப்புரைகளுக்கு, அரசாங்க வளங்களை மட்டுமன்றி சிறைச்சாலையில் உள்ள கைதிகளையும் பயன்படுத்தி வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளன.
மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரை மேடை அமைப்பு, அலங்காரப் பணிகளுக்கு சிறைச்சாலையில் இருந்து கொண்டு வரப்பட்ட கைதிகளை அரசாங்கம் பயன்படுத்துவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே குற்றம்சாட்டியுள்ளது.
சிறைச்சாலை உடையை ஒத்த வகையிலான நீலநிற காற்சட்டையுடன் கைதிகள் பரப்புரை அலங்காரம் மற்றும் மேடை அமைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாத்தறை, கம்புறுப்பிட்டியவில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட கூட்டத்துக்கான பணிகளை மேற்கொள்வதற்கு காலி சிறைச்சாலையில் இருந்து 44 கைதிகள் கொண்டு வரப்பட்டிருந்தனர்.
கைதிகள், நீலக்காற்சட்டையுடன், பரப்புரைக்கான மேடை அமைப்பு மற்றும் அலங்காரப் பணிகளில் ஈடுபட்டுள்ளதைக் காட்டும் ஒளிப்படங்களையும், கபே அமைப்பு வெளியிட்டுள்ளது.
தொழிலாளர்களாக சிறைக்கைதிகள் பயன்படுத்தப்படுவதாகவும், அதிபர் தேர்தல் பரப்புரைக்கு சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பெருமளவு வளங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
கம்புறுப்பிட்டிய தேர்தல் பரப்புரைக்கு சிறைச்சாலை வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் கபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையே, அதிபர் தேர்தல் பரப்புரைக்கு அரசாங்க வளங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக ட்ரான்ஸ்பரன்சி இன்ரநசனல் அமைப்பு, சிறிலங்கா தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளது.
அனுராதபுரவில் கடந்தவாரம் தேர்தல் பரப்புரை ஆரம்ப நிகழ்வில், பெருமளவு அரச வளங்களைப் பயன்படுத்தி, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளார்.
இந்தக் கூட்டத்துக்காக 1000 அரச பேருந்துகளில் பொதுமக்கள் ஏற்றிவரப்பட்டனர். இதனால் பொதுமக்களும், க.பொ.த சாதாரணதரத் தேர்வு எழுதும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
தேர்தல் விதிமுறைகளை மீறி அரச தொலைக்காட்சிகளான ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு என்பன, சிறிலங்கா அதிபரின் பேர்தல் பேரணிகளை நேரலையாக ஒளிபரப்புகின்றன.
இதற்காக ஐரிஎன் தொலைக்காட்சி 2 மில்லியன் ரூபாவுக்கு மேல் செலவிட்டுள்ளது.
பொதுக் கட்டடங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறி சிறிலங்கா அதிபரின் தேர்தல் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் ட்ரான்ஸ்பரன்சி இன்ரநசனல் அமைப்பு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கம், தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த அமைப்புகள் பக்கச்சார்பாகச் செயற்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா,
“தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் பக்கசார்பானவை. அரசாங்கத்துக்கு எதிரான விவகாரங்களையே இவை முக்கியத்துவப்படுத்துகின்றன.
ஏனையவர்கள் குறித்து பாராமுகமாக இருக்கின்றன. தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் பொய்யான குற்ற்ச்சாட்டுகளையே சுமத்துகின்றன.” என்றும் கூறியுள்ளார்.



