ராஜபக்ச குடும்பத்தினர் தப்பியோட விடமாட்டேன் – மைத்திரி சூளுரை
அடுத்த மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் தாம் வெற்றிபெற்றால், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளானவர்களை நாட்டை விட்டுத் தப்பிச்செல்ல விடமாட்டேன் என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடந்த சம்பிக்க ரணவக்க எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய அவர்,
“அதிபர் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால், பலர் நாட்டை விட்டுத் தப்பியோடுவதற்குக் காத்திருக்கின்றனர்.
ஊழல்களில் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும், அவர்களை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கமாட்டேன்.
அரசாங்கத்தில் இருந்த போது ஊழல்கள் குறித்து பேசுவதற்கு எனக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நேற்றுமுன்தினம் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, வரும் ஜனவரி 8ம் நாள் இரவு 11 மணியுடன் கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும் என்றும், ராஜபக்சவினரைத் தப்பிச்செல்ல விடமாட்டேன் என்றும் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
