மேலும்

மகிந்தவின் ஆட்சியில் எனக்கும் அநீதி இழைக்கப்பட்டது – அண்ணன் சமல் புலம்பல்

mahinda-basilசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் தனக்கும் அநீதி இழைக்கப்பட்டதாக, பொதுக்கூட்டம் ஒன்றில் பகிரங்கமாக புலம்பியிருக்கிறார் சிறிலங்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ச.

சிறிலங்கா அதிபரின் மூத்த சகோதரரான சமல் ராஜபக்ச நேற்று காலியில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே இவ்வாறு கூறியிருக்கிறார்.

“2005ம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அதிகாரத்துக்கு வந்த போது, இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது நீதியான முறையில் எனக்கு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை.

விவசாய அமைச்சைக் கவனிக்கும் அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர் பொறுப்பே வழங்கப்பட்டது.

மகாவலி அபிவிருத்தித் துறை இல்லாத, நீர்ப்பாசன அமைச்சு என்னிடம் தரப்பட்டது.

அதுபற்றி நான் அப்போது கேட்ட போது, அதனை மைத்திரிபால சிறிசேன தனக்குத் தர வேண்டும் என்று கேட்டதாக எனக்குக் கூறப்பட்டது.

ஆனால் எப்போதுமே மகாவலி அபிவிருத்தி அமைச்சு, நீர்ப்பாச அமைச்சின் கீழ் தான் இருந்து வந்துள்ளது.

மைத்திரிபால சிறிசேனவும், நானும் ஒன்றாகவே 1989ம் ஆண்டு, முதல் முறை நாடாளுமன்றத்துக்குத் தெரிவானோம்.

இந்த இடத்தில் எனக்கு அநீதி இழைக்கப்பட்டது.

பதவிகள், முக்கியமல்ல. நாட்டு மக்களுக்கு நாம் செய்யும் சேவை தான் முக்கியமானது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சமல் ராஜபக்ச, தாம் சபாநாயகர் பதவிக்கு நியமிக்கப்படுவதை விரும்பவில்லை என்றும், அமைச்சர் பதவியையே எதிர்பார்த்ததாகவும் கூறியிருந்தார்.

எனினும் குடும்பத்தினரின் வற்புறுத்தலால்,  அவர் சபாநாயகர் பதவியை ஏற்றிருந்தார்.

இதற்கிடையே, தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், அரசியலில் இருந்து ஓய்வுபெற சமல் ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக வதந்திகள் பரவியுள்ளன.

எனினும் அதுபற்றி நேற்றைய கூட்டத்தில் அவர் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *