மேலும்

எதிரணியின் பரப்புரையை முடக்கும் சிறிலங்கா அரசின் புதிய தந்திரோபாயம்

sl.electionகொழும்பிலும் ஏனைய முக்கிய இடங்களிலும், எதிரணியினால் பெரியளவிலான பரப்புரைக் கூட்டங்களை நடத்த முடியாத வகையில், சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெரியளவிலான அரசியல் கூட்டங்களை நடத்தக் கூடிய மைதானங்கள் மற்றும் இடங்களை சிறிலங்கா அரசாங்கம் தமது ஆதரவாளர்களின் பெயரில் முன்பதிவு செய்து வைத்துள்ளதாக, தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் அமைப்பின் தேசிய இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும், மைதானங்கள் மற்றும் இடங்களை முன்பதிவு செய்வதன் மூலம், அரசாங்கம் மாற்றுக் குரல்களை அடக்க முனைவதாகவும், இது மிகப்பெரிய தேர்தல் வன்முறை என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரதானமாக, கொழும்பு மாநகரப் பகுதியை இலக்கு வைத்தே, அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அத்துடன், மகரகம பகுதி மைதானங்களும் இவ்வாறு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கொண்டு வரப்பட்டுள்ளன.

கடந்தவாரம் பல்வேறு பெயர்களில் இந்தப் பகுதி மைதானங்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டதால், எதிர்க்கட்சிகளால் எந்தக் கூட்டத்தையும் நடத்த முடியவில்லை.

ஆனால், முன்பதிவு செய்யப்பட்ட மைதானங்கள் எவற்றிலுமே எந்த நிகழ்வுகளும் நடத்தப்படவில்லை.

இந்தநிலை நீடித்தால் தேர்தல் ஆணையாளர் தலையிட வேண்டும் என்று மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க,

“எமது அனுபவத்தின்படி, இந்த தேர்தல் மிகவும் வன்முறைகள் நிறைந்த,  ஊழல்மிக்க, செலவுமிக்க ஒன்றாக இருக்கும்.

சிறிலங்கா அரசாங்கம் சந்திகளிலும், பூங்காக்களிலும் பல்வேறு காரணங்களைக் கூறி பரப்புரைகளை மேற்கொள்ள முடியாமல் தடுக்கிறது.

பாதுகாப்புக் காரணங்களைக் காட்டியும், மைதானங்களை தமது முகவர்களைக் கொண்டு முன்பதிவு செய்தும், எதிர்க்கட்சிகளை பரப்புரை செய்ய முடியாமல் செய்துள்ளது.

மாகாணசபைத் தேர்தலின் போது, கம்பகாவிலும், கிரிபத்கொட பகுதியிலும் நாம் பல கூட்டங்களை நடத்தியிருந்தோம்.

இம்முறை ஒரு கூட்டத்தையேனும் எம்மால் நடத்த முடியவில்லை.

எல்லாக் கட்சிகளுக்கும் பரப்புரை செய்ய இடமளிக்கக் கூடிய வகையில், இந்த விவகாரத்தில் தலையிடுவதற்கு தேர்தல் ஆணையாளருக்கு உரிமை உள்ளது.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஐதேக தலைமைத்துவ சபைத் தலைவர் கரு ஜெயசூரிய,

“இது மிகவும் மோசமான விதிமீறல். எமது குரல்களை ஒடுக்க முனையும் அரசாங்கம், தேர்தல் பரப்புரைகளுக்காக அலரி மாளிகையையும், அரசாங்க வாகனங்களையும், உலங்குவானூர்திகளையும், பணியகங்களையும் பயன்படுத்துகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *