மேலும்

கிழக்கு மாகாணசபை அடுத்தவாரம் கவிழ்கிறது? – வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்படும்

Najeeb Abdul Majeedகிழக்கு மாகாணசபை கலைக்கப்படலாம் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின், மாகாணசபை உறுப்பினர்கள், போர்க்கொடி உயர்த்தியுள்ளதையடுத்தே இந்த நிலை எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா அரசாங்கத்தை விட்டு விலகும்படி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், தமது தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், அடுத்தவாரம் கிழக்கு மாகாணசபையில் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படலாம் என்று நம்பகமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதனால், கிழக்கு மாகாணசபை கலைக்கப்படுவதாற்கு வாய்ப்புகள் உள்ளன.

கிழக்கு மாகாணசபையின் வரவுசெலவுத் திட்ட விவாதம் நாளை மறுநாள் திங்கட்கிழமை ஆரம்பமாகி, அடுத்தமாதம் 5ம் நாள் வரை இடம்பெறவுள்ளது.

கிழக்கு மாகாணசபையில் ஆளும் கூட்டணியில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு 7 உறுப்பினர்கள் உள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த 6 பேரும், தேசிய காங்கிரசை சேர்ந்த 3 பேரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த 3 பேரும் ஆளும் கூட்டணியின் சார்பில் அங்கம் வகிக்கின்றனர்.

இவர்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் 3 உறுப்பினர்களும் ஏற்கனவே தனித்து செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தால், கிழக்கு மாகாணசபை அரசு கவிழ்ந்து விடும்.

அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 11 உறுப்பினர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அமீர் அலிக்கு நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், தாம் தொடர்ந்து அரசாங்கத்தில் இருந்து விலகி தனித்து இயங்கவுள்ளதாக அந்தக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர் மொகமட் சிப்லி தெரிவித்துள்ளார்.

கல்முனை கரையோர மாவட்டக் கோரிக்கையை நிறைவேற்றுகின்ற- முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய வேட்பாளரையே சிறிலங்கா அதிபர் தேர்தலில் ஆதரிக்கும்படி கிழக்கு மாகாணசபையின் பெரும்பாலான முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தமது தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து முடிவெடுத்தால் கட்சிக்குள் பிளவுகள் ஏற்படலாம் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு அச்சம் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *