சிறீலங்காவின் அதிபர் தேர்தலும் ஈழத்தமிழ்மக்களும்
இத்தேர்தல் தமிழ் தேசிய கூட்டமைப்பினதோ அல்லது அதன் உறுப்பினர்களுடையதோ அரசியற்பலத்தினையும் அவர்களது பதவிக்கதிரைகளையும் தீர்மானிப்பதல்ல. எனவே எவ்வித அவசரமும் அற்ற நிதானம் செயற்பாடுகளை தீர்மானிப்பதிலும் அறிக்கைகள் நேர்காணல்களை தருவதிலும் கருத்துரைப்பதிலும் தேவைப்படுகிறது.
சிறீலங்கா சோசலிச சனநாயக குடியரசின் நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபரை புதிதாக தெரிவு செய்வதற்கான தேர்தல் ஒன்று உரிய காலத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பும் இத்தகைய தேர்தல்களை இலங்கையில் வாக்காளர்கள் சந்தித்திருந்தாலும் இம்முறை இத் தேர்தல் முற்றிலும் வேறுபட்ட பரிமாணத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் பொறுப்புக்கூறும் கடப்பாடு இல்லாததும் நீதித்துறையினால் கேள்விகளுக்கு உட்படுத்த முடியாததுமான அதிகாரங்களைக்கொண்ட நிறைவேற்று அதிகார அதிபர் முறையின் தொடர்ச்சியினைப் பேணுவதா அல்லது அதனை ஒழித்து மீண்டும் நாடாளுமன்ற சனநாயகத்தினை வலுப்படுத்துவதா என்ற வினாவே இத்தேர்தலில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு முன்னைநாள் அதிபர் திருமதி.சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கருத்துரைக்கும் போது நிறைவேற்று அதிகாரமுறை கூடாது என்று என்பதல்ல, அதனை யார் கொண்டிருக்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே அதன் சாதக பாதக தன்மை அமைகின்றது என்று குறிப்பிட்டிருந்தார். இரண்டு தொடர்ச்சியான காலங்களுக்கு நிறைவேற்று அதிகார அதிபராக அமர்ந்திருந்தும் நாட்டில் புரையோடிக்கிடக்கும் இனப்பிரச்சனைக்கு நியாய மானதும் ஏற்புடைத்துமான தீர்வு ஒன்றை உருவாக்கத் தவறியவர் இன்று சீ சீ இந்தப்பழம் புளிக்கும் என்கிறார். அவர் அன்று தனது அதிகாரத்தையும் தற்துணிவையும் பொருத்தமாக பயன்படுத்தியிருந்தால் தமிழ்மக்கள் எதிர்கொண்ட மிகப்பெரிய மானிடத்துயர் நிகழ்ந்திருக்காது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
கடந்த காலத்தில் நடபெற்ற இரண்டு அதிபர் தேர்தல்களிலும் தமிழ்மக்களின் அக்கால அரசியற்தலைமையினைக் கொண்டிருந்தோர் மேற்கொண்டிருந்த முடிவுகள் அத்தேர்தல் முடிவுகளிலும் அதுசார்ந்த தொடர்விளைவுகளிலும் முக்கிய தாக்கம் செலுத்தியது. அதனை தமிழ்மக்களின் நல்வாழ்விpல் அக்கறைகொண்ட அனைவரும் அறிவார்கள். அவை கற்றுத்தந்த பாடங்களை இம்முறை மிகக்கவனமாக மீள்பரிசீலனைக்கு உட்படுத்தி மிக மிக நிதானமாக முடிவுகளை மேற்கொள்ளும் மிகப்பெரிய பொறுப்பு தமிழ்க்கூட்டமைப்பின் தலைமையிடமும் அதன் அங்கத்தவர்களிடமும் இருக்கின்றது.
இத்தேர்தல் தமிழ் தேசிய கூட்டமைப்பினதோ அல்லது அதன் உறுப்பினர்களுடையதோ அரசியற்பலத்தினையும் அவர்களது பதவிக்கதிரைகளையும் தீர்மானிப்பதல்ல. எனவே எவவித அவசரமும் அற்ற நிதானம் செயற்பாடுகளை தீர்மானிப்பதிலும் அறிக்கைகள் நேர்காணல்களை தருவதிலும் கருத்துரைப்பதிலும் தேவைப்படுகிறது.
இது கூட்டமைப்பின் சகல கட்சிகளுக்கும் அவற்றின் பொறுப்புக்களில் இருப்பவர்களுக்கும் ஏனைய அங்கத்தவர்களுக்கும் பொருந்தும். இதிலிருந்து புலம்பெயர் தேசங்களிலுள்ள தமிழ்மக்களின் செயற்பாட்டாளர்களும் தமிழ் நாட்டிலிருந்து குரல்கொடுப்பவர்களும் கூட விதிவிலக்கு பெறமுடியாது.
இம்முறை அதிபர்பதவிக்கு போட்டியிடுபவர்கள் அதீத எதிர்பார்புகளை மக்களுக்கு தரக்கூடிய வாக்குறுதிகளை தரப்போவதில்லை. தற்போது ஆட்சியிலுள்ளவர் தனது கடந்த கால செயற்பாட்டினை நியாயப்படுத்தி தொடர்வதற்கான அங்கீகாரத்தினையும் தன்னால் கட்டமைக்கப்பட்டுள்ள குடும்ப-இராணுவ ஆட்சிக்கட்டமைப்பினை தக்கவைப்பதற்கான பலத்தையும் குறிவைத்து மீண்டும் போட்டியிடுகிறார்.
எதிரணியின் பொது வேட்பாளர் நூறு நாட்களுக்குள் நிறைவேற்று அதிபர்முறையினை ஒழித்து மீண்டும் நாடாளுமன்ற சனநாயகத்தின் உயர்மாண்பினை கட்டியெழுப்பும் ஒற்றை இலக்குடன் களமிறக்கப்படுகின்றார்.
இத்தேர்லின்போது தமிழ்தேசிய கூட்டமைப்போ அல்லது வேறு தமிழர் தரப்புக்களோ தமிழ்மக்களின் முன்னுரிமைகள சார்ந்த எந்தவொரு வேண்டுகோள்களையும் முன்வைக்க முடியாது. இதனை தமிழ்மக்கள் முழுமையாக புரிந்து கொள்வார்கள். எனவே தமிழ்மக்கள் தங்களது மன உணர்வுகளுக்கு ஏற்ப தற்துணிபுடன் எதிர்வரும் அதிபர்தேர்தலில் வாக்களிக்க தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் ஏனைய தமிழர்தரப்பு அரசியல் தலைமைகளும் புலம்பெயர் தமிழ்ச் சமுகமும் தமிழ் நாட்டின் அரசியல் செயற்பாட்டாளர்களும் அனுமதிக்க வேண்டும்.
தமிழ்மக்களின் சுயமான அரசியல் ஆளுமையினை தவறாக நெறிப்படுத்தும் எவ்விதமான முயற்சிகளும் முற்றாக தவிர்க்கப்படவேண்டும். அத்துடன் தமிழின விரோதம்கொண்ட சிங்கள பௌத்த தேசியவாத சக்திகள் பக்கச்சார்பாக தவறான அணிகளுடன் ஒருங்கிணையக்கூடிய தூண்டல்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்லது ஏனைய தமிழர் தரப்புகள் காரணமாகிவிடக்கூடாது.
இங்கு இத்தேர்லின்போது தழிழ் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய தமிழர் தரப்புக்களும் தங்களுக்குரிய தலைமைத்துவ பொறுப்பிலிருந்து விலகிநிற்கவேண்டும் என பொருள்கொள்ளக்கூடாது. இவர்களிடம் மிகப்பெரிய பொறுப்பு விழுந்துள்ளது.
தமிழ் மக்களின் சனநாயக உரிமை வாக்களிக்கும் அதிகாரம் மற்றவர்களால் கொள்ளையிடப்படாமலும் தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதனையும் சகல தமிழ்த்தரப்பினரும் உறுதிசெய்யவேண்டும். ஆகக்கூடிய அளவு தமிழ்மக்கள் இத்தேர்தலில் பங்குபற்றி வாக்களித்து தங்களது எண்ணக்கிடக்கையை சுயமாக வெளிபடுத்துவதனை உறுதி செய்யவேண்டும். தமிழ் மக்களின் பங்கேற்பு குறைவதும் குறைக்கப்படுவதும் கூட இத்தேர்தலின் முடிவில் செல்வாக்கு செலுத்தும் என்பதனை நாம் மறக்கக்கூடாது.
‘புதினப்பலகை’ குழுமத்தினர்
22 – 11 2014.