மேலும்

கிழக்கு மாகாண முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?

Najeeb Abdul Majeedகிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்துக்கு எதிராக, வரும் 24ம் நாள் நடைபெறவுள்ள மாகாணசபை அமர்வில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரப்போவதாக, எதிர்க்கட்சிகள் அச்சுறுத்தியுள்ளன.

துணை முதலமைச்சராக அமீர் அலியை நியமிக்கும் படி, ஆளும்கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

இந்த வாக்குறுதியை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச காப்பாற்றவில்லை என்று அந்தக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்ச தாம் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்குறுதி அளித்திருந்த போதும், அது நிறைவேற்றப்படவில்லை.

அமீர் அலி ஏனைய வேட்பாளர்களை விட அதிக வாக்குகளைப் பெற்றிருந்த போதும் அவருக்கு எந்தப் பதவியும் அளிக்கப்படவில்லை.

தற்போதைய முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் குறைந்த வாக்குகளைப் பெற்றுத் தெரிவானவராவார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கு. நான்கு ஆசனங்களையும், இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களையும், வழங்குவதுடன், மேலதிகமாக தவிசாளர் மற்றும் அமைச்சர் பதவியையும் வழங்குவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.

ஆனால் இதுவரை தமக்கு எந்தப் பதவிகளும் வழங்கப்படவில்லை என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், வரும் 24ம் நாள், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐதேக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் ஆறு உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு எதிராக கிழக்கு மாகாணசபையில் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்தவாரம், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், நடத்திய கூட்டத்தில் கட்சியின் 70 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அதில் கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் கட்சிப் பிரதிநிதிகள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், தற்போது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர முனைந்துள்ளது.

கிழக்கு மாகாணசபைக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து 12 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

அவர்களில், மூன்று பேர் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பிலும், மூன்று பேர் தேசிய காங்கிரஸ் சார்பிலும், ஐந்து பேர் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பிலும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதற்கிடையே ஆளும்கட்சியின் மாகாணசபை உறுப்பினர்களுக்கு சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று நடத்திய கூட்டத்தையும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் மூன்று மாகாணசபை உறுப்பினர்களும் புறக்கணித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *