மேலும்

3 நிபந்தனைகளுக்கு இணங்கும் வேட்பாளருக்கே ஆதரவு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

suresh-premachandranசிறிலங்கா அதிபர் தேர்தலில் மூன்று நிபந்தனைகளின் அடிப்படையிலேயே எந்தவொரு வேட்பாளருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவை வழங்கும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியில்,

“சிறிலங்கா அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை முடிவு செய்யவில்லை.

மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் தான், எந்த வேட்பாளரையும், ஆதரிப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்தாலோசிக்கும்.

1. வடக்கு, கிழக்கில் இருந்து இராணுவத்தை விலக்கிக் கொண்டு, இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும்.

  1. பல ஆண்டுகளாக எந்த விசாரணைகளுமின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
  1. தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை வழங்க வேண்டும்.

இந்த மூன்று நிபந்தனைகளையும், நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கும், வேட்பாளரை ஆதரிப்பது குறித்து கூட்டமைப்பு ஆலோசிக்கும்.

இந்த நிபந்தனைகளுக்கு அளிக்கப்படும் பதிலைப் பொறுத்தே, அரசதரப்பு வேட்பாளரையா அல்லது எதிரணி வேட்பாளரையா ஆதரிப்பது என்று முடிவு செய்யப்படும்.

எந்தவொரு அரசியல்கட்சியும் இது தொடர்பாக இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசவில்லை.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராசா ஆகியோர், நடத்திய பேச்சுக்கள் அதிபர் தேர்தல் தொடர்பானவை அல்ல.

தமிழ் – முஸ்லிம் சமூகங்களின் பிரச்சினைகள் குறித்தே அதில் பேசப்பட்டன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *